சீனாவில் தயாரிக்கப்பட்ட மற்றொரு கோவிட் -19 தடுப்பூசியைப் பரிசோதிப்பதற்கான இடமாக, மலேசியா தேர்வு செய்யப்பட்டுள்ளது, இந்த முறை ஷென்சென் காங்தாய் உயிரியல் தயாரிப்புகள் கூட்டுறவு நிறுவனம் அதனைத் தயாரித்துள்ளது.
சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மூன்றாம் கட்ட மருத்துவ ஆய்வுக்குத் தேசிய மருந்து ஒழுங்குமுறை பிரிவு (என்.பி.ஆர்.ஏ.) மே 28-ம் தேதி ஒப்புதல் அளித்தது என்றார்.
“இந்த மருத்துவ ஆய்வில், சீனாவின் ஷென்சென் காங்தாய் உயிரியல் தயாரிப்புகள் நிறுவனம், தயாரித்த சார்ஸ்-சிஒவி-2 (SARS-CoV-2) தடுப்பூசி (வெரோ செல்கள்), செயலிழப்பு, 5μg / 0.5mL தயாரிப்புகள் ஈடுபடுத்தப்படும்.
“இந்த 3-ஆம் கட்ட மருத்துவ ஆய்வு, மலேசியாவில் உள்ள எட்டு ஆராய்ச்சி மையங்களில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுகொண்ட 3,000 பங்கேற்பாளர்களைக் கொண்டு நடத்தப்படும், இதற்கு 15 முதல் 19 மாதங்கள் வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த மருத்துவ ஆய்வில், கொலம்பியா, அர்ஜெண்டினா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் உக்ரைன் போன்ற பிற நாடுகளும் ஈடுபட்டுள்ளன.
இந்தத் தடுப்பூசி 2021 மே 14-ம் நாள், அவசரகால பயன்பாட்டு ஒப்புதல் (Emergency Use Approval ) மூலம் சீனாவால் அங்கீகரிக்கப்பட்டது.
தனது சொந்தத் தடுப்பூசிகளைத் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல், சீனாவில் ஆக்ஸ்போர்டு / அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசிகளைத் தயாரிப்பதற்கான சிறப்பு உரிமையும் காங்தாய்க்கு உண்டு.
மருத்துவப் பரிசோதனையை நடத்துவதற்கு, யோங் தை பெர்ஹாட்டின் துணை நிறுவனமான ஒய்.டி.பி. ஹெல்த்கேர் சென். பொறுப்பேற்கும்.
நாட்டில், கோவிட் -19 தடுப்பூசிக்கு, மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனையை நடத்தும் முதல் தனியார் நிறுவனம் இதுவாகும்.
தற்போது, மலேசியாவில் ஃபைசர், அஸ்ட்ராஸெனெகா மற்றும் சினோவேக் ஆகிய தடுப்பூசிகள் கிடைக்கின்றன.
நேற்றைய நிலவரப்படி, மலேசியாவில் சுமார் எட்டு விழுக்காடு பெரியவர்கள் கோவிட் -19 தடுப்பூசியைக், குறைந்தபட்சம் ஒரு மருந்தளவு பெற்றுள்ளனர்.