இந்த வாரத் தொடக்கத்தில், தான் தெரிவித்த கருத்துகளுக்கு மாறாக, அவசரக் காலச் சட்டத்தைப் பயன்படுத்தி, வங்கிகளை ஒரு முழுமையான கடன் ஒத்திவைப்புக்கு அனுமதிக்குமாறு புத்ராஜெயா கட்டாயப்படுத்தலாம் என்பதை நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் ஒப்புக் கொண்டார்.
இருப்பினும், இந்த நடவடிக்கை அரசாங்கத்திற்குச் சுமையாக இருக்கும் என்றும், பெரிய தாக்கங்களை அது ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
பெமெர்காசா பிளஸ் தூண்டுதல் தொகுப்பில், ஒரு விரிவான கடன் ஒத்திவைப்பை வழங்குமாறு வங்கிகளைக் கட்டாயப்படுத்த முடியாது என்ற ஜஃப்ருலின் கருத்து விமர்சனத்திற்கு உள்ளானதை அடுத்து இந்தச் சமீபத்திய அறிக்கை வந்தது.
இன்று, தி ஸ்டார் நாளிதழிலில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், அவசர (அத்தியாவசிய அதிகாரங்கள்) கட்டளை 2021-இன் பிரிவு 4-ஐ ஜஃப்ருல் மேற்கோள் காட்டி, இது “பொது நன்மைக்கு தேவையான வளங்களைக் கையகப்படுத்தவும் திரட்டவும்” அரசாங்கத்தை அனுமதிக்கிறது.
“ஆனால், பிரிவு 5-ல், அரசாங்கத்தின் ஒவ்வொரு கட்டாய அணுகுமுறையும், வளங்களை உருவாக்கிய தரப்பினருக்கு ஈடுசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறது.
“சுருக்கமாக, அரசாங்கத்தின் செலவு இல்லாமல் இதைச் செய்ய முடியாது,” என்று அவர் கூறினார்.
ஒரு விரிவான கடன் ஒத்திவைப்பை வழங்குவதற்காக, வங்கிகளைச் சமநிலைப்படுத்த பொது நிதியைப் பயன்படுத்துவது சரியல்ல என்று அவர் கூறினார்.
“நம்மால் செய்யக்கூடியது என்பதால், நாம் அதனைக் கட்டாயம் செய்ய வேண்டும் என்று அர்த்தமாகுமா?
“விரிவான கடன் ஒத்திவைப்பை மீண்டும் அமல்படுத்துவது, தேவையில்லாத நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் வங்கிகளுக்குக் கணிசமாக தொகையை ஈடுசெய்ய வேண்டியிருக்கும்.
“இது நிதி ரீதியாக எவ்வாறு அர்த்தமுள்ளதாக இருக்கும்?” என்று அவர் சொன்னார்.
தனிநபர்களுக்கும் வணிகங்களுக்கும் இலக்கு வைத்த உதவிகளை அல்லது மானியங்களை விநியோகிக்க வளங்கள் சிறப்பாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று ஜாஃப்ருல் வாதிடுகிறார்.
நீண்ட கால விளைவு
மேலும், ஒரு விரிவான கடன் ஒத்திவைப்பு வழங்க, வங்கிகளைக் “கட்டாயப்படுத்துவது” நீண்ட காலத்திற்குப் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் வாதிடுகிறார்.
“அடித்தளங்களை உருவாக்குவதற்கும், நிலையான சந்தைகளை உருவாக்குவதற்கும் சட்டங்கள் தேவை.
“அவசரகால அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்துவதன் மூலம், ஒப்பந்தத்தை மீறவோ அல்லது மாற்றவோ சம்பந்தப்பட்ட தரப்பினரை நாம் கட்டாயப்படுத்தலாம். இரு தரப்பினர்களுக்கிடையிலான ஒப்பந்தத்தில், ஒருவர் இணங்காமல் போனால் எதிர்கால வணிகத்திலும் முதலீட்டிலும் அது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
“இது நமது மூலதனச் சந்தைகளைப் பாதிக்கக்கூடிய தொலைநோக்கு தாக்கங்களையும் கொண்டிருக்கக்கூடும், இதன் விளைவாக நிதி வெளியேறுவது, இறுதியில் ரிங்கிட்டின் மதிப்பைப் பாதிப்பதோடு, வணிகச் செலவையும் அதிகரிக்கும், கூட்டாக நமது பொருளாதாரத்தில் கடுமையான நீண்டகாலத் தாக்கங்களையும் அது ஏற்படுத்தும்,” என்று அவர் சொன்னார்.
சட்டம், ஜி.எல்.சி மற்றும் வங்கிகள்
வங்கிகளைக் கட்டுப்படுத்த மலேசிய மத்திய வங்கி சட்டம் 2009 மற்றும் நிதிச் சேவைச் சட்டம் 2013-ஐப் பயன்படுத்துமாறு அம்னோ இளைஞர் தலைவர் அசிராஃப் வாஜ்டி துசுகி முன்பு அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தார்.
இன்று, ஜஃப்ருல் கூறுகையில், சட்டத்தை ஒரு வழியில் பயன்படுத்துவது அவர்களின் இருப்புக்கான “ஆற்றலுக்கும் பகுத்தறிவுக்கும் முரணானது” என்றார்.
சில வணிக வங்கிகள், பணியாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்), பெர்மோடாலான் நேஷனல் பெர்ஹாட் (பிஎன்பி), அமானா சஹாம் பெர்ஹாட் (ஏஎஸ்பி) மற்றும் தபோங் ஹாஜி போன்ற அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களுக்கு (ஜிஎல்சி) சொந்தமானவை என்றும் அஸ்ரஃப் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து கருத்து தெரிவித்த ஜஃப்ருல், ஜி.எல்.சி.க்குச் சொந்தமான வங்கிகள் சிரமங்களை எதிர்கொண்டால் மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்றார்.
“இந்த வங்கிகள் குறைந்த வருமானம் பெற்றால், ஈபிஎஃப் உறுப்பினர்கள் மற்றும் பிஎன்பி வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த ஈவுத்தொகை செலுத்தும். சுருக்கமாக, ஈபிஎஃப் மற்றும் பிஎன்பி போன்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மூலமாகவும் வங்கியைச் ‘சொந்தமாக’ வைத்திருப்பது பொது மக்கள்தான்.
“இறுதியில், வங்கி ஈபிஎஃப், ஏஎஸ்பி அல்லது தபோங் ஹாஜி மற்றும் பிறரிடமிருந்து குறைந்த ஈவுத்தொகையை மக்கள் பெறுவார்கள், எடுத்துக்காட்டாக, ஒரு விரிவான கடன் ஒத்திவைப்பின் மூலம் வங்கி நஷ்டம் அடைந்தால்.
விரிவான கடை ஒத்திவைப்பு ‘பொறுப்பற்றது’
எனவே, அனைவருக்கும் ஒரு விரிவான கடன் தடையை அனுமதிப்பதில் ஆபத்து மிக அதிகம் என்று ஜாஃப்ருல் வலியுறுத்தினார்.
“நாம் ஏற்கனவே ஒரு பொது சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம்; சாத்தியமான நிதி மற்றும் வங்கி நெருக்கடியை ஏன் மேலும் தூண்ட வேண்டும்?
“அனைவருக்கும் ஒரு விரிவான கடன் தடையை அனுமதிக்க, அரசாங்கம் இதுபோன்ற அபாயங்கள் அனைத்தையும் சுமப்பது நியாயமற்றது அல்லது பொறுப்பற்றது, குறிப்பாக குறைந்தது 80 விழுக்காடு கடன் வாங்கியவர்களுக்கு இது தேவையில்லை என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம், உண்மையாக உதவி தேவைபடுபவர்களுக்கு வங்கிகள் ஏற்கனவே இலக்கு வைத்த உதவிகளை வழங்குகின்றன,” என்று அவர் கூறினார்.