மலேசியக் கல்விச் சான்றிதழ் (எஸ்.பி.எம்) 2021 தேர்வு, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்று கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
வாய்மொழி மற்றும் நடைமுறை அறிவியல் சோதனைகள் பிப்ரவரி 2022-இல் செயல்படுத்தப்படும் என்றும் மூத்தக் கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின் தெரிவித்தார்.
தற்போது நாட்டைப் பாதித்து வரும் கோவிட் -19 தொற்றின் தற்போதைய நிலைமையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அவர் சொன்னார்.
“தற்போதைய நிலைமை மற்றும் எஸ்பிஎம் 2021 வேட்பாளர்கள் சந்திக்க வேண்டிய சவால்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கல்வியமைச்சு இந்த முடிவை எடுத்துள்ளது,” என்று அவர் இன்று காலை, தனது செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
முன்னதாக, 2020-ஆம் ஆண்டிற்கான எஸ்பிஎம் தேர்வு முடிவுகள், ஜூன் 10-ஆம் தேதி அறியப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்தது.
கோவிட் -19 நோய்தொற்றின் காரணமாக, எஸ்பிஎம் 2020 தேர்வையும் இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு மாற்ற வேண்டியிருந்தது.
ராட்ஸி, எஸ்பிஎம் 2020 தேர்வை நிர்வகித்த அனுபவத்தின் அடிப்படையில், கல்வியமைச்சு இப்போது தயார் நிலையில் இருப்பதாக அவர் கூறினார்.
தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, கல்வியமைச்சு சிறந்த, தரமான எஸ்.ஓ.பி.க்களைத் தயாரித்துள்ளது என்றும் அவர் சொன்னார்.