கோவிட் -19 தொற்றுநோயைச் சமாளிக்க, நாடு இன்னமும் சிரமப்பட்டு வரும் இந்த நேரத்தில், 15-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ15) பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) எந்தச் சின்னத்தைப் பயன்படுத்துவது என்பது குறித்து விவாதிக்க இது சரியான நேரம் அல்ல என்று டிஏபி அமைப்புச் செயலாளர் அந்தோனி லோக் கருதுகிறார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில், பிஎச் அமர்வின் போது இந்த விவகாரம் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது, மேலும் ஒவ்வொரு உறுப்புக் கட்சியும் இது குறித்து “பொது புரிதலை” அடைந்துள்ளனர்.
“எந்தவொரு தரப்பினரும் இந்த விஷயத்தை வெளிப்படையாக எழுப்பி, ஒருவருக்கொருவர் சண்டையிட வேண்டிய அவசியமில்லை. தேர்தல் உத்தி மற்றும் அதிக வெற்றி வாய்ப்பைக் கொண்டுள்ள சின்னம் எது என்றக் கேள்விகளைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.
“நேரம் வரும்போது, பிஎச் தலைமை மன்றம் இந்த விஷயத்தில் ஒரு கூட்டு முடிவை எடுக்கும்.
“அதுவரை, பிஎச்-க்கான மக்களின் ஆணையை மீட்டெடுக்க, நாங்கள் கடுமையாக போராடுவோம்,” என்று பிஎச் தலைமை மன்றத்தின் செயற்குழு உறுப்பினரான அவர் நேற்று இரவு ஒரு முகநூல் பதிவில் தெரிவித்தார்.
நேற்று, பி.கே.ஆர். கட்சியின் இளைஞர் பிரிவு மாநாட்டில், அதன் தலைவர் அக்மல் நசீர் பரிந்துரைத்த, ஜிஇ15-இல் அக்கட்சியின் சின்னத்தைப் பிஎச் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து லோக் கருத்து தெரிவித்தார்.
அக்மலின் கூற்றுப்படி, வலிமையைத் திரட்டுவதற்கும், பிஎச் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும் இந்தப் பரிந்துரை முன்வைக்கப்படுகிறது.
இந்தத் தீர்மானத்தை, டிஏபி இளைஞர் தலைவர் ஹோவர்ட் லீ எதிர்த்தார், அமானா இளைஞர் தலைவர் ஷஸ்னி முனீர் மொஹமட் இத்னின், அதுபற்றி விவாதிக்க எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறினார்.
பதிவுக்காக, கடந்த ஜிஇ-யில், பிஎச் கூட்டணிக்கு அதிகாரப்பூர்வப் பதிவு கிடைக்காததால், பி.கே.ஆர். சின்னம் அந்த நேரத்தில் பயன்படுத்தப்பட்டது.
கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் பிஎச் தற்போது முழுமையாகக் கவனம் செலுத்த வேண்டும் என்று லோக் கூறினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் பிஎச் தலைவர்களும் தொற்றுநோயால் வருமானத்தை இழந்த மக்களின் நலன்களைக் கவனிக்க வேண்டும்.
“அவசரநிலை உடனடியாக முடிவடைந்து, நாடாளுமன்ற அமர்வு மீண்டும் தொடங்குவதை உறுதிப்படுத்த, நமது ஆற்றலையும் ஒத்துழைப்பு மனப்பான்மையையும் மையமாகக் கொள்ளுங்கள்… மலேசியாவில் ஜனநாயகத்தைப் புதுப்பிக்க இந்த அத்தியாயத்தில் நாம் ஒன்றுபட வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.