பி40 குழுவைச் சார்ந்த பள்ளி குழந்தைகளுக்கு, மடிக்கணினிகள் உட்பட 13,000 சாதனங்களைக் கல்வி அமைச்சு இதுவரை விநியோகித்துள்ளதாக அதன் அமைச்சர் மொஹமட் ராட்ஸி முகமட் ஜிடின் தெரிவித்துள்ளார்.
150,000 மடிக்கணினிகளை இலக்காகக் கொண்ட மீதமுள்ள கையளிப்பு, செப்டம்பர் 2021 இறுதிக்குள் முடிக்கப்படும் என்றும் ராட்ஸி கூறினார்.

95 பள்ளிகளுக்கு, மொத்தம் 12,887 சாதனங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன … மேலும் 40,290 சாதனங்களின் விநியோகம் ஜூன் 12-ஆம் தேதி நிறைவடையும்.
“மீதமுள்ள 96,823, 2021 செப்டம்பர் இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் இன்று ஓர் இயங்கலை செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
ஹசானா அறக்கட்டளையின் முயற்சியிலான இந்தச் சாதனங்களின் விநியோகம், கடந்த நவம்பர் 2021 வரவு செலவுத் திட்டத்தின் போது அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, இல்லமிருந்து கற்பித்தல் மற்றும் கற்றலுக்கு (பிடிபிஆர்) உட்பட்ட சில மாணவர்கள் சிரமங்களை எதிர்கொண்டதைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பினரும் அச்சாதனங்களின் விநியோக நிலை குறித்து கேள்வி எழுப்பி வந்தனர்.
150,000 சாதனங்களை – அதாவது மடிக்கணினிகள் மற்றும் வரைப்பட்டிகைகள் – அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்கள் (ஜி.எல்.சி) மற்றும் அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட முதலீட்டு நிறுவனங்கள் (ஜி.எல்.ஐ.சி) நன்கொடையாக வழங்கின.

இதற்கிடையில், ஆசிரியர்களின் தடுப்பூசி நிலை குறித்து கேட்டபோது, சுமார் 70,000 கல்வியாளர்கள் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்று ராட்ஸி விளக்கினார்.
“இன்றுவரை 70,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் குறைந்தது ஒரு மருந்தளவைப் பெற்றுள்ளனர்.
“ஜூலை வரை பள்ளி அமர்வுகள் திறக்கப்படாது, ஆசிரியர்களிடையே நோய்த்தடுப்பு நிலைக்கு இந்தக் காலகட்டத்தில் நாங்கள் முயற்சிப்போம்,” என்று அவர் கூறினார்.
எனவே, இந்த விஷயத்தைச் சம்பந்தப்பட்ட அமைச்சருடன் விவாதிக்கவுள்ளதாக ராட்ஸி கூறினார்.

























