மூழ்கியப் படகுகள் : மசீச அனைவரையும் மூழ்கடித்துவிடும் – டிஏபி

பினாங்கு துறைமுக ஆணையத்தில் (எஸ்.பி.பி.பி), மசீச தலைவர்களின் தலைமைத்துவதைப் புலாவ் திக்குஸ் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் கிறிஸ் லீ சாடினார்.

பினாங்கு நகரில் கைவிடப்பட்ட படகுகளின் படங்கள், சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, இரு கட்சிகளுக்கும் இடையே வாய்மொழி யுத்தம் ஏற்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆணையத்தில் உள்ள மசீச தலைமையை, “வெட்கமில்லாதது” என்று லீ விவரித்தார், ஏனெனில், கட்சிக்குப் பினாங்கு நகரில் எந்தவொரு நாடாளுமன்றமோ, மாநிலச் சட்டமன்ற இடங்களோ இல்லை.

“பினாங்கின் சின்னமான படகுகள் மூழ்கியது, எஸ்.பி.பி.பி.-இல் அவர்களின் தலைமை முற்றிலும் தோல்வியுற்றது என்பதைக் காட்டுகிறது,” என்று லிம், கைவிடப்பட்ட படகுகளின் படங்கள் மக்களிடையே பரவலானதைச் சுட்டிக்காட்டி பேசினார்.

கடந்த சனிக்கிழமையன்று, பினாங்கு என்று பெயரிடப்பட்ட ஒரு படகின் படங்கள் கைவிடப்பட்டு, உடைந்து, நீர் உட்புகும் நிலையில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

முன்னாள் முதல்வர் லிம் குவான் எங், இந்தப் படங்களைச் சமூக ஊடகங்களில் மறுபதிவு செய்து, பினாங்கு படகுச் சேவை நிறுத்தப்பட்டதைத் தொட்டு, மசீச தலைவரும் போக்குவரத்து அமைச்சருமான வீ கா சியோங்கை சாடி பேசினார்.

இருப்பினும், இந்தச் சம்பவத்திற்குக் காரணம் பினாங்கு படகு சேவை நிறுத்தப்பட்டதல்ல, மாறாக சம்பந்தப்பட்ட அப்படகு, 2019 முதல் இயங்கவில்லை என்று வீ கூறினார்.

இன்று ஓர் அறிக்கையில், புக்கிட் பெண்டேரா தொகுதியின் டிஏபி சட்டமன்ற உறுப்பினரான லீ, எஸ்பிபிபியை நிர்வகிக்கும் பொறுப்பையும், பினாங்குக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பையும் மசீசவுக்கு வழங்கக்கூடாது என்று கூறினார்.

“அவர்கள் நிச்சயமாக அனைவரையும் அவர்களுடன் மூழ்கடித்துவிடுவார்கள்,” என்று கூறிய லீ, எஸ்பிபிபி-யிலுள்ள அனைத்து கட்சித் தலைவர்களையும் இராஜினாமா செய்யவும் வலியுறுத்தினார்.

“இன்னும் கொஞ்சமேனும் கௌரவம் எஞ்சியிருந்தால், எஸ்பிபிபி-யில் வகிக்கும் அனைத்து பதவிகளையும் இராஜினாமா செய்து, படகு சேவைகள் நிர்வகிப்பைப் பினாங்கு அரசாங்கத்திடம் ஒப்படைக்க மத்திய அரசிடம் அவர்கள் பரிந்துரைக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.