சீனக் கடலோரக் காவல் கப்பல்கள், மலேசியக் கடலுக்குள் நுழைந்தது

சீனா மற்றும் மலேசியாவின் உரிமைகோரலில் சிக்கியுள்ள, சரவாக், பெத்திங் பாத்திங்கி அலி அருகே, ஒரு சீனக் கடலோர காவல்படை கப்பல் காணப்பட்டது.

அதே பகுதியில், 16 சீனப் போர்க்கப்பல்கள் பறந்த நான்கு நாட்களுக்குப் பின்னர் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடலோரக் காவல்படை கப்பல், ஜூன் 4-ம் தேதி, மிரி கடற்கரையில் இருந்து 84 கடல் மைல் (155 கி.மீ.) தொலைவில், மலேசியக் கடலுக்குள் நுழைந்தது என்று தி போர்னியோ போஸ்ட் தெரிவித்துள்ளது.

“ஆம், ஜூன் 4-ம் தேதி, சீனக் கடலோரக் காவல்படை நம் கடல் பகுதிக்குள் நுழைந்தது குறித்து எங்களுக்கு ஓர் அறிக்கை வந்தது என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்.

“மலேசியக் கடல்சார் அமலாக்க நிறுவனமும் (ஏபிஎம்எம்) அரச மலேசியக் கடற்படையும் (திஎல்டிஎம்) நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன,” என்று மிரி ஏபிஎம்எம் இயக்குநர் மொஹமட் ஃபௌசி ஓத்மான் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து தெளிவுபடுத்த, மலேசியாகினி சீனத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறது.