‘அனைத்து கருத்துகளையும் செவிமடுக்க, மாமன்னர் திறந்த மனதுடன் இருக்கிறார்’

இன்று காலை, மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா மற்றும் அன்வர் இப்ராஹிம் இடையேயான சந்திப்பில், புதிய மலேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்த பிரச்சினைகள் ஏதும் பேசப்படவில்லை.

இன்று காலை, 11.54 மணிக்கு இஸ்தானா நெகாராவை விட்டு வெளியேறிய பின்னர் பி.கே.ஆர். தலைவர் இதை விளக்கினார்.

“இது இப்போது எழாத ஒரு கேள்வி,” என்று அகோங்குடனான சந்திப்பில், இந்தப் பிரச்சினை குறிப்பிடப்பட்டதா என்ற செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

அடுத்த சில நாட்களில், அகோங் கட்சித் தலைவர்களைச் சந்திக்க அழைத்ததன் நோக்கம் என்ன என்று கேட்டதற்கு, “அந்த உரிமை அவருக்கு உள்ளது”, என்று அன்வர் கூறினார்.

“ஆனால், சற்றுமுன்னதான என் அனுபவத்தின் அடிப்படையில், மாமன்னர் அனைவரின் கருத்துகளையும் கேட்க திறந்த மனதுடன் இருக்கிறார்,” என்று அவர் கூறினார்.

பக்காத்தான் ஹராப்பானின் (பி.எச்.) தலைவரான அன்வர், பல விஷயங்களில், அகோங்கின் பரிசீலனைக்காக அறிக்கைகளையும் ஆய்வுகளையும் தயார் செய்துள்ளதாகவும் சொன்னார்.