1969-ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டது போன்று, ஒரு தேசியச் செயல்பாட்டு மன்றத்தை (என்ஓசி) அரசாங்கம் அமைக்க வேண்டுமென்று, இன்று யாங் டி-பெர்த்துவான் அகோங்குடனான தனது சந்திப்பின் போது டாக்டர் மகாதிர் மொஹமட் முன்மொழிந்துள்ளார்.
இருப்பினும், இந்தத் திட்டம் நிறைவேறுமா என்பதில் முன்னாள் பிரதமர் சந்தேகம் கொண்டுள்ளார்.
“அகோங் அதை நிராகரிக்கவில்லை, அவர் ‘வேண்டாம்’ என்று சொல்லவில்லை, ஆனால் என்ஓசி அமைப்பதற்கான இந்த முன்மொழிவு, அரசாங்கத்திடமிருந்து வர வேண்டும் என்றார் அவர்.
“ஆனால் அரசாங்கம் இதை முன்மொழியும் என்று நான் நினைக்கவில்லை, அது நடக்கும் என்று நான் நினைக்கவில்லை,” என்று அவர் இன்று பிற்பகல் ஓர் இயங்கலை ஊடக மாநாட்டில் கூறினார்.
95 வயதான அவர், மாகேரன் என்றும் அழைக்கப்படும் என்ஓசி-யை யார் வழிநடத்துவார் என்பது பற்றி விவாதிக்கவில்லை, ஆனால் அவர் தனது சேவைகளை “அரசாங்கம் விரும்பினால்” வழங்க தயார், இருப்பினும், இதுவும் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது சந்தேகமே என்றார்.
முன்னதாக, பிரதமர் முஹைடின் யாசினின் மூத்த அந்தரங்கச் செயலாளர் மர்சுகி மொஹமட் என்ஓசிக்கு ஆட்சேபனை தெரிவித்தார்.
“அவரைப் பொறுத்தவரை (மர்சுகி) எல்லாம் நன்றாக இருக்கிறது. பொருளாதாரம், சமூகம், தொற்றுநோய், எல்லாம் நன்றாக இருக்கிறது.
“அது அவருடைய கருத்து. ஆனால், எல்லாம் நன்றாக இருக்கின்றது என்று நாங்கள் நினைக்கவில்லை. (சுமார்) 3,000 பேர் இறந்துவிட்டார்கள் (கோவிட் -19) அவர்கள் இறந்திருக்கக்கூடாது,” என்று மகாதீர் கூறினார்.
மார்சுகியின் 10 நிமிட வீடியோ பதிவு, நேற்று இரவு 8 மணியளவில் பதிவேற்றப்பட்டது, அதில், மாமன்னரிடம் என்ஓசி-யை உருவாக்க வேண்டுமென சிலர் பரிந்துரைப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
இன்றைய சூழ்நிலை வேறுபட்டது, எனவே இது தேவையற்றது, தற்போது “பாதுகாப்பு அவசரநிலை” இல்லை, நாடு தற்போது “சுகாதார அவசரநிலையை” எதிர்கொள்கிறது என்றும் அவர் சொன்னார்.
இதற்கிடையில், மகாதீர் தனது முன்மொழிவை விரிவாகக் கூறுகையில், அப்போது என்ஓசி அமல்படுத்தப்பட்டதால், துன் (அப்துல்) ரசாக்கின் அரசாங்கம் 1969 பொதுத் தேர்தல் மற்றும் அடுத்தடுத்த இனக் கலவரங்களிலிருந்து உருவான அரசியல் நெருக்கடியைக் கையாள முடிந்தது என்றார்.
எனவே, இப்போது இதேபோன்ற ஒரு செயல்பாட்டு நிறுவனம் நாட்டில் நிலைத்தன்மையைக் கொண்டுவர உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.