பி.கே.ஆர். நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா சானி அப்துல் ஹமீட், எதிர்காலத்தில் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) மற்றும் அம்னோ இடையிலான ஒத்துழைப்பு வாய்ப்பைக் காண்பதாகத் தெரிவித்தார்.
அம்னோ தேசியக் கூட்டணியில் இருந்து வெளியேறினால், அந்தச் சாத்தியத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் என்று அப்துல்லா கூறினார்.
“நாடாளுமன்றம் கூட்டப்பட்ட பின்னர், அடுத்தக் கட்டம் சட்டபூர்வமான அதிகாரத்தை நாட வேண்டியதுதான்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
எனவே, பிஎச் அம்னோவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கும் என்று அந்த காப்பார் எம்.பி. சொன்னார்.
இரு கட்சிகளும் கூட்டாக ஒரு அரசாங்கத்தை உருவாக்கலாம் அல்லது இதற்கு முன்னர் பேராக்கில் முன்மொழியப்பட்டது போல, அதாவது நம்பிக்கை மற்றும் விநியோக ஒப்பந்தத்தின் (confidence and suppy agreement – CSA) அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தி.
“பேராக்கில் என்ன நடக்கிறது – புதிய அணிகளின் அர்த்தம் அதுதான்.”
அம்னோ புதிய அரசாங்கத்தை ஆதரிக்கிறதா அல்லது அதன் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறதா என்பது குறித்து தனக்கு கவலையில்லை என்றும், டிஏபிக்கும் இதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது என்றும் அப்துல்லா கூறினார்.
“நாம் நாட்டை மேம்படுத்த விரும்புகிறோம். டிஏபியும் அம்னோவும் இணைந்து செயல்பட முடியுமென்றால் அதனை நான் பாராட்டுகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த அறிக்கை, அம்னோவுடன், குறிப்பாக ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பல அம்னோ தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் டிஏபி தயக்கம் காட்டுகிறது என்ற கருத்து வெளியாகியுள்ளதை அடுத்து வந்தது.
நேற்று, டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், “பெரிய கூடாரம்” அணுகுமுறை எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதே தவிர, அம்னோவுடன் ஒத்துழைப்பது பற்றியது அல்ல எனக் கூறியதாக மிங்குவான் மலேசியாவை மேற்கோள் காட்டியுள்ளது.
அம்னோவுடன் ஒத்துழைப்பு என்பது பி.கே.ஆரின் பார்வை மட்டுமே என்று கூறிய அவர், பிஎச்-ஐப் பொறுத்தவரையில், பிரதமரை எதிர்த்துப் போராடத் தயாராக இருக்கும், அவசரகால ஆணையை நிறைவுக்குக் கொண்டுவர விரும்பும் எந்தவொரு எதிர்க்கட்சியும் அனைத்து எம்.பி.க்களையும் – அரசாங்க எம்.பி.க்கள் உட்பட – ஒன்றிணைப்பதுதான் அதன் இலக்கு என்றார்.
முன்னதாக, “பெரிய கூடாரத்தின்” பிரச்சினையை எழுப்பியபோது, சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை ஏற்றுக்கொள்ளும் எந்தத் தரப்பினரையும், அம்னோ உட்பட, ஏற்றுக்கொண்டு பணியாற்ற பி.எச். தயாராக உள்ளது என்று பி.கே.ஆர் பொதுச்செயலாளர் சைஃபுட்டின் நாசுதியோன் தெரிவித்தார்.
பி.எச்.-இல் உள்ள பி.கே.ஆரின் கூட்டாளிகளான டிஏபியும் அமானாவும் இந்தக் கருத்துக்கு இசைகின்றன, ஆனால் வேறுபட்ட அணுகுமுறையுடன் – வாரிசான், உப்கோ, பெஜுவாங் மற்றும் மூடா போன்ற பிற எதிர்க்கட்சிகளுடன் இணைவது அவற்றின் நோக்கமாகும்.
இருப்பினும், அரசியலில் யாரும் நண்பராகவோ எதிரியாகவோ இறுதிவரை இருப்பதில்லை என்று அப்துல்லா வலியுறுத்தினார்.
ஆகஸ்ட் மாதத்தில் அவசரநிலை முடிந்ததும் அல்லது அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, அம்னோவுடன் ஒத்துழைப்பு பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்றார் அவர்.
மற்ற எதிர்க்கட்சிகளையும், இதன் ஒரு பகுதியாக இருக்கலாம் என்பதனை அவர் நிராகரிக்கவில்லை.
இது அவரது தனிப்பட்ட கருத்து மட்டுமே என்று கூறிய அவர், ஆனால் அது பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிமின் கூற்றுக்கு ஏற்ப அமைந்தது என்பதனையும் வலியுறுத்தினார்.