இந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த டிஏபி கட்சியின் மாநாடு, நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை (பி.கே.பி) பின்பற்றி ஒத்திவைக்கப்படுவதாக டிஏபி தேசிய அமைப்புச் செயலாளர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
டிஏபி கட்சி மாநாட்டை ஒத்திவைக்க வேண்டும் என்று, ஜூன் 11 தேதியிட்ட மலேசியச் சங்கங்கள் பதிவுத் துறையின் (ஆர்.ஓ.எஸ்.) தலைமை இயக்குநர் ஜஸ்ரி காசிம் அவர்களிடமிருந்து டிஏபி ஒரு கடிதத்தைப் பெற்றதாக அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், அரசியல் கட்சிகள் உட்பட பதிவுசெய்யப்பட்ட அனைத்து அமைப்புகளுக்கான வருடாந்திரப் பொதுக் கூட்டம், பி.கே.பி. 3.0 அமலாக்க காலத்தில் ஒத்திவைக்க வேண்டும் என்று ஆர்.ஓ.எஸ். முடிவு செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“டிஏபி கட்சி மாநாட்டிற்கு, பி.கே.பி. 3.0 முடிந்ததும், கூடுதல் எஸ்ஓபி செயல்பாடுகளுடன், புதிய தேதி ஒன்றை முன்மொழியுமாறும் ஆர்.ஓ.எஸ். எங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
“எனவே, 2021, ஜூன் 20-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த டிஏபி கட்சி மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த விரும்புகிறேன்.
“மேலும், டிஏபி கட்சி மாநாட்டின் புதிய தேதியைப் பி.கே.பி. காலகட்டத்தை அரசாங்கம் நிறைவு செய்த பின்னரே தீர்மானிக்க முடியும்,” என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், முன்னதாக ஒத்திவைக்கப்பட்ட கெஅடிலான் கட்சியின் (பி.கே.ஆர்.) 2020-ஆம் ஆண்டு தேசிய மாநாடு ஜூன் 20 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
ஜூன் 9-ம் தேதி, ஆர்.ஓ.எஸ். ஊடக அறிக்கையைக் குறிப்பிட்டு பி.கே.ஆர். இந்த முடிவை எடுத்ததாக, தேசிய மாநாட்டின் இயக்குநரும் பி.கே.ஆர். தேசிய அமைப்பு செயலாளருமான நிக் நஸ்மி நிக் அஹ்மத் தெரிவித்தார்.
“மே 21 அன்று, ஆர்.ஓ.எஸ்.-லிருந்து பி.கே.ஆருக்கு வந்த கடிதத்தில், ஜூன் 30-க்குள் மாநாட்டை நடத்த கட்சிக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஜூன் 4-ம் தேதி, மெய்நிகரில் தொடங்கிய அம்மாநாடு, தேசியப் பாதுகாப்பு மன்றம் மற்றும் ஆர்.ஓ.எஸ்.-இன் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து ஜூன் 5-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் நடைபெறவுள்ள மாநாட்டில், அனைத்து 2,000 பிரதிநிதிகளும், காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில், அவரவர் வீடுகளில், ஸூம் விண்ணப்பத்தின் மூலம் இயங்கலையில் பங்கேற்பார்கள் என்று நிக் நஸ்மி கூறினார்.
அவரைப் பொறுத்தவரை, பொருளாதாரப் பிரச்சினைகள், சுகாதாரம் மற்றும் ஜனநாயகத்தை மீட்டெடுப்பது குறித்து மாநாடு கவனம் செலுத்தும்.