அவசரகால சிறப்பு  செயற்குழு முடிவை இன்னும் இறுதி செய்யவில்லை

யாங் டி-பெர்த்துவான் அகோங்கிற்கு வழங்கப்பட வேண்டிய, அவசரநிலையை நீட்டிப்பதா அல்லது முடிவுக்குக் கொண்டுவருவதா என்ற முடிவை, அவர்கள் இன்னும் இறுதி செய்யவில்லை என்பதை அவசரக்கால சிறப்பு செயற்குழு உறுதிப்படுத்தியது.

ஒரு கூட்டு ஊடக அறிக்கையில், 2021 அவசரகாலச் சுதந்திர சிறப்பு செயற்குழுவில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று உறுப்பினர்கள், அதாவது பி.கே.ஆர். பொதுச்செயலாளர், சைபுதீன் நாசுதியோன் இஸ்மாயில், டிஏபி அமைப்புச் செயலாளர் அந்தோனி லோக் மற்றும் அமானா திட்ட இயக்குநர் துல்கெஃப்ளி அஹ்மத் ஆகியோர் பல்வேறு கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

கோவிட் -19 தொற்றுநோய், தடுப்பூசிகள், தினசரி இறப்புகள், மருத்துவமனை வசதிகள், நாட்டின் பொருளாதார நிலை மற்றும் மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை இதில் அடங்கும்.

“இன்றைய நிலவரப்படி, மாட்சிமை தங்கிய மாமன்னருக்கு வழங்கப்பட வேண்டிய அவசரநிலையை நீட்டிப்பதா அல்லது முடிவுக்குக் கொண்டுவருவதா என்று எந்தவொரு முடிவையும் குழு இன்னும் இறுதி செய்யவில்லை,” என்று அவர்கள் கூறினர்.

“எங்கள் நிலைப்பாடு என்னவென்றால், அவசரகாலத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை, அதற்குப் பதிலாக பி.கே.பியைக் கடுமையாகச் செயல்படுத்துவதே சிறந்த முறையாகும்.

“நாடாளுமன்ற கூட்டம் நம் நாட்டின் ஜனநாயகக் கொள்கைகளுக்கு இணங்க உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்பதும் எங்கள் கருத்து,” என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

கடந்த பிப்ரவரி மாதம், பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவின் ஒப்புதலைப் பெற்ற பின்னர், 2021 அவசரகால சுதந்திர சிறப்புச் செயற்குழு நிறுவப்பட்டது.

இது அவசர (அத்தியாவசிய அதிகாரங்கள்) கட்டளை 2021, பிரிவு 2-இன் படி நிறுவப்பட்டது.

19 பேர் அடங்கிய இந்தக் குழுவிற்கு, முன்னாள் தலைமை நீதிபதி அரிஃபின் ஜகாரியா தலைமை தாங்குகிறார்.