ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர், ஜொகூர் மாநிலச் சட்டமன்றம், 2021 ஆகஸ்ட் 12-ம் தேதி கூடுவதற்கு ஒப்புக் கொண்டார்.
கோத்த இஸ்கந்தாரில் நடைபெறவுள்ள அந்தச் சட்டமன்றத்தின் நான்காவது அமர்வுக்கு வருகை தந்து, அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கவும் சுல்தான் இப்ராஹிம் ஒப்புக் கொண்டார்.
“மக்கள் மற்றும் ஜொகூர் மாநிலத்தின் நலனுக்காக, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒன்றுபட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். குறிப்பாக, கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கு உதவுவதற்கான செயல் திட்டத்திலும், ஜொகூர் மாநிலத்தின் பொருளாதார மீட்பு திட்டத்தை முறையாக தொகுக்கவும்.
“இப்போது பிரச்சனையிலும், பயத்திலும், பதட்டத்திலும் இருக்கும் என் மக்களின் வாழ்க்கை நிலையைப் பார்த்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.
“இன்று வரை, கோவிட் -19 தொற்று பரவுதல் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்பதில், நான் ஏமாற்றமடைகிறேன்,” என்று அவர் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இராயல் பிரஸ் அலுவலகத்திற்கு (ஆர்.பி.ஓ.) அனுப்பிய ஒரு செய்தியில் தெரிவித்தார்.
இன்று காலை, சுல்தான் இப்ராஹிம், ஜொகூர் மந்திரி பெசார் ஹஸ்னி முகமது; ஜொகூர் மாநிலச் செயலாளர், அஸ்மி ரோஹானி மற்றும் ஜொகூர் சட்ட ஆலோசகர், அமீர் நஸ்ருதீன் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.
மாநிலத்தில், கோவிட் -19 தொற்றுநோய் குறித்த அறிக்கையைப் பெறுவதற்காக, ஜொகூர் மாநிலச் சுகாதார இயக்குநர் டாக்டர் அமான் ராபுவையும் சுல்தான் சந்திக்கவுள்ளார்.
ஜூன் 17-ம் தேதி, சட்டமன்றத்தை மீண்டும் திறக்க, முயற்சிகள் மேற்கொள்வது குறித்து மந்திரி பெசாருடன் விவாதிக்க தயாராக உள்ளதாகப் பி.எச். சொன்னது.
கடந்த மே 25-ம் தேதி, ஜொகூரில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் கோவிட் -19 தொற்று பரவல் மற்றும் மாநில மக்கள் மீதான அதன் தாக்கம் குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று சுல்தான் இப்ராஹிம் கூறினார்.
கோவிட் -19 தொடர்பான, தேசிய மீட்புத் திட்டம் அதன் மூன்றாம் கட்டத்திற்குள் நுழைந்தால்தான் நாடாளுமன்றத்தை மீண்டும் திறக்க முடியும் என்று பிரதமர் முஹைதீன் யாசின் சமீபத்தில் கூறினார்.
தினசரி நேர்வுகள் 2,000-க்கு மேல் போகாமல், தீவிரச் சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) போதுமான வசதிகள் இருப்பதோடு, மலேசியர்களில் 40 விழுக்காட்டினர் முழு அளவிலான தடுப்பூசி பெற்ற பிறகுதான் மூன்றாம் கட்ட மாற்றம் செய்யப்படும்.
இது செப்டம்பரில் அடையப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.