தேவைப்பட்டால், எந்த நேரத்திலும் கலப்பின (hybrid) மக்களவை அமர்வுகளை நடத்த நாடாளுமன்றத்தில் போதுமான வசதிகள் உள்ளன.
மக்களவை துணை சபாநாயகர் மொஹமட் ரஷீட் ஹஸ்னோன், நாடாளுமன்றமும் தேவையான பிற தொழில்நுட்பப் பகுதிகளைச் சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்றார்.
“நிச்சயமாக போதுமான அளவு வசதிகள் தயாராக உள்ளன, அதைச் (கலப்பின அமர்வு) செயல்படுத்த நாங்கள் கூடுதலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்,” என்று கோலாலம்பூரில், பெர்னாமாவிடம் அவர் கூறினார்.
மக்களவை அமர்வுக்குக் குறிப்பிட்ட தேதி எதுவும் இல்லை என்றும், இது நடைமுறை விதிகளின்படி இருக்கும் என்றும், அமர்வு தொடங்குவதற்கு முன்பு 28 நாட்கள் அறிவிப்பு வழங்க வேண்டும் என்ற விதியை இது பின்பற்றும் என்றும் அவர் கூறினார்.
“அடுத்த அமலாக்கத்திற்கு, மன்றத் தலைவரின் விருப்பத்திற்கு நாங்கள் அதை விட்டு விடுகிறோம்,” என்று அவர் கூறினார்.
கலப்பின நாடாளுமன்ற மாநாட்டை அமல்படுத்துவது ஒரு புதிய விதிமுறையாகும், இது சாத்தியமற்றது அல்ல, இது கோவிட்-19 தொற்றுநோயை எதிர்கொண்டுள்ள மலேசியாவிற்கு ஒரு வரலாறாக இருக்கும் என்றார் அவர்.
“இது சபாநாயகருக்கு ஒரு புதிய சவாலாகும்,” என்று அவர் கூறினார்.
மொஹமட் ரஷீட் கூறுகையில், ஒரு கலப்பின மக்களவை கூடினால், வாக்களிக்கும் செயல்முறை போன்ற திருத்தம் செய்ய வேண்டிய மக்களவை விதிகள் சில உள்ளன, மேலும் தேவையான அனைத்து திருத்தங்களும் தற்போதுள்ள விதிகளில் கூடுதலாகச் சேர்க்கப்படும் என்றார்.
“மற்றொரு எடுத்துக்காட்டு, நாடாளுமன்ற நடைமுறையின், 62 (5)-இல், நாடாளுமன்றச் சபையில் இல்லாத உறுப்பினர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது 62 (1)-உடன் படிக்கப்பட்டுள்ளது, இது இந்த அரசியலமைப்பின் விதிகள் மற்றும் கூட்டாட்சி சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டது, ஒவ்வொரு நாடாளுமன்றச் சபையும் அதன் சொந்த நடைமுறையை ஒழுங்குபடுத்த முடியும்,” என்று அவர் கூறினார்.
திருத்தம் செய்யப்பட்டால் மக்களவையில் நேருக்கு நேர் தோன்ற வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்து கேட்டதற்கு, போதுமான கோரம் எடுப்பதற்கான குறைந்தபட்ச எண்ணிக்கை 26 உறுப்பினர்கள் என்று மொஹமட் ரஷீட் கூறினார்.
- பெர்னாமா