மாட் ஹசான் : நெருக்கடி காலத்தில் மக்களைக் கடன்படச் சொல்வது நியாயமில்லை

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) 3.0-இன் போது, சமூகக் கடன் துறை அல்லது உரிமம் பெற்றக் கடன் வழங்குநர்கள் (பி.பி.டபிள்யூ.) செயல்பட அனுமதிக்கும் வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சின் (கே.பி.கே.தி.) முடிவு குறித்து அம்னோ துணைத் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த முடிவு அபத்தமானது என்றும், மக்களுக்கு அவர்களின் தற்போதைய சிரமங்களுக்கு உதவாது என்றும் முகமது ஹசான் கூறினார்.

“கே.பி.கே.தி. தேவைப்படும் மக்களின் சுமையை எளிதாக்குவது இதுதானா?

“மக்கள் கடன்பட ஊக்குவிப்பது எங்கே நியாயமானது? இதுதான் பொறுப்பான மீட்புத் திட்டமா?

“நீட்டிக்கப்பட்ட பி.கே.பி. 3.0 காலகட்டத்தில், மக்களுக்குத் தகுந்த பொருளாதார உதவி தேவைப்படுகிறது. கடன் சுமையைச் சேர்ப்பது நிதி அழுத்தத்திலிருந்து வெளியேறுவதற்கான தீர்வாகாது,” என்று அவர் இன்று தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

கே.பி.கே.தி.யின் முடிவு, கடினமான சூழ்நிலைகளில் இருக்கும் மக்களை மேலும், கடனாளியாக்க மறைமுகமாக ஊக்குவிக்கிறது என்று முகமது மேலும் கூறினார்.

“கஷ்டத்தில் இருப்பவர்களைக் கடன் பள்ளத்தாக்கில் தள்ளுவது பொறுப்பற்றது மட்டுமல்ல, மிகவும் ஒழுக்கக்கேடானது,” என்று அவர் மேலும் கூறினார்.

ஜூன் 23 அன்று, கே.பி.கே.தி.-யின் கீழ் பதிவுசெய்யப்பட்ட சமூகக் கடன் துறை (கே.கே) அல்லது பிபிடபிள்யூ துறை செயல்பாடு உடனடியாக நடைமுறைக்கு வர அரசாங்கம் ஒப்புக்கொண்டது.

ஜூன் 18-ல், தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் சிறப்பு கூட்டத்தைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக கே.பி.கே.தி. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“கே.கே. அல்லது பிபிடபிள்யூ நிறுவனங்கள் சிம்ஸ் 3.0 தளத்தின் மூலம் www.miti.gov.my இயக்க அனுமதிக்கு, இன்று முதல் புதிய விண்ணப்பத்தைச் செய்யலாம்.

இதற்கிடையில், கே.பி.கே.தி. மக்களுக்கு அதிக நலன்புரி உதவிகளைச் செய்ய உள்ளூர் அரசாங்க இருப்புக்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் மேலும் சொன்னார்.