ஜாஃப்ருல் : வங்கி மோரோடேரியம், இபிஎஃப் திரும்பப் பெறுதல் ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும்

கடன் ஒத்திவைப்பு மற்றும் ஐ-சினார் வசதி மூலம் இபிஎஃப்-லிருந்து பணம் திரும்பப் பெறுவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.

முழு கதவடைப்பு, 2-ஆம் கட்டத்திற்கு மாற்றுவதற்கான இலக்கு அளவுகோல்கள் பூர்த்தி செய்யப்படாததால், கட்டம் 1 நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நேரத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

“நான் ஏற்கனவே பிரதமருடனும் தொடர்புடைய நிறுவனங்களுடனும் பேசியுள்ளேன்.

“அரசாங்கம் மக்களின் தேவைகளைச் செவிமடுக்கின்றது, விரைவில் பொருத்தமான உதவிகள் அறிவிக்கப்படும்,” என்று அவர் தனது முகநூலில் தெரிவித்தார்.

நாட்டின் தடுப்பூசி திட்டப் பொறுப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன், முன்பு இதேபோல் பிரதமர் முஹைதீன் யாசின் மேலும் பொருளாதார உதவிகளை அறிவிப்பார் என்று கூறியிருந்தார்.

ஜூன் 1 முதல் முழு நடமாட்டத் தடை நடைமுறைக்கு வந்தபோது, ​​பி40-களுக்கும், வேலை இழந்தவர்களுக்கும் கடனைத் திருப்பிச் செலுத்த மூன்று மாதக் கால அவகாசத்தை அரசாங்கம் வழங்கியது.

இதற்கிடையில், இவ்வாண்டு தொடக்கத்தில் ஐ-சினார் ஈபிஎஃப் பங்களிப்பாளர்கள் தங்கள் கணக்கு 1-இலிருந்து சேமிப்புகளைத் திரும்பப் பெற அனுமதித்தது.

முதலாம் கட்ட முழு கதவடைப்பு, வரும் திங்கள்கிழமையோடு முடிவடைய திட்டமிடப்பட்டுள்ளது.

இருப்பினும், 2-ஆம் கட்ட மாற்றத்திற்கான அளவுகோல்கள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை.

2-ஆம் கட்டம், கட்டம் 1-இலிருந்து மிகவும் வேறுபட்டதல்ல, ஆனால் வணிகச் செயல்பாடுகள் மீதான கட்டுப்பாடுகளில் சற்று தளர்வு கொடுக்கப்படும். செயல்பட அனுமதிக்கப்பட்ட வணிகங்கள் தங்கள் பணியாளர்களில் 80 விழுக்காட்டினரோடு அவ்வாறு செய்யலாம்.

இருப்பினும், சமூகத் துறைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.