மீட்புநிலை திட்டத்தின் முதல் கட்டம் நீட்டிக்கப்படும் – பிரதமர்

நாளை முடிவடைய திட்டமிடப்பட்டுள்ள தேசிய மீட்புநிலை திட்டத்தின் (பிபிஎன்), நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி.) முதல் கட்டம் முடிவடையாது, அது ஜூலை நடுப்பகுதி வரை தொடரும் என்று பிரதமர் முஹைதீன் யாசின் தெரிவித்தார்.

நாட்டில், கோவிட் -19 நேர்வுகளின் எண்ணிக்கை 4,000-க்குக் குறைவான வரம்பை எட்டாததால், முதல் கட்டம் நீட்டிக்கப்படுவதாக அவர் விளக்கினார்.

“இப்போது பி.கே.பி. முடிவுக்கு வரப்போகிறது என்று அவர்கள் சொல்கிறார்கள், இப்போது நான் சொல்கிறேன், இனிமேல் நாம் பி.கே.பி. பற்றி குறிப்பிடப் போவதில்லை, நாம் அதன் கட்டத்தில் இருக்கிறோம், இப்போது இந்த முதல் கட்டம் (பிபிஎன்) ஜூலை மாதத்தின் நடுப்பகுதி வரை இருக்கலாம், அல்லது தொடரலாம்.

“ஜூன் 28-ல் பி.கே.பி. முடிவுரும் என்று சொல்லவில்லை, அது தவறு … நாம் இன்னும் அதன் முதல் கட்டத்தில்தான் இருக்கிறோம், புதிய நேர்வுகளின் எண்ணிக்கை 4,000-க்குக் குறைவாக இல்லை, மேலும் தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து, தடுப்பூசிகள் அதிகரிக்கப்படும் வரை இது தொடரும்,” என்று முஹைடின் கூறியதாகப் பெர்னாமா செய்தி அறிக்கைகள் மேற்கோள் காட்டியுள்ளன.

இந்த முறை, பி.கே.பி. ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வந்தது. இரண்டு வாரங்களுக்குத் திட்டமிடப்பட்ட இது பின்னர் நாளை (ஜூன் 28) வரை நீட்டிக்கப்பட்டது.

தேசிய மீட்புநிலை திட்டத்தின்படி, மூன்று முக்கிய இலக்குகளை அடைந்தால் மட்டுமே முழு இயக்க கட்டுப்பாடுகளின் முதல் கட்டத்திலிருந்து மாற்றம் செய்யப்படும்.

இரண்டாம் கட்டத்திற்குள் நுழைவதற்கான முதன்மை அளவுகோல்கள், தினசரி 4,000-க்கும் குறைவான கோவிட் -19 நேர்வுகள்; தீவிரச் சிகிச்சை பிரிவின் (ஐ.சி.யூ.) படுக்கை திறன் “மிதமான”மட்டத்தில் இருக்க வேண்டும்; மேலும் 10 விழுக்காடு மக்களுக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும்.

இன்றுவரை நாடு அந்த இலக்குகளை அடையவில்லை. கோவிட் -19 நேர்வுகளின் ஏழு நாள் சராசரி எண்ணிக்கை 5,351 ஆகும், அதே நேரத்தில் ஐ.சி.யு. நோயாளிகளின் எண்ணிக்கை இன்று (866), ஜூன் 1 (872) அன்று முழு முற்றுகை நடைமுறைக்கு வந்ததை விட அதிகமாக உள்ளது.

இந்த மாதத்தில் மட்டும், இறந்துபோன கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை 2,088 ஆகும்.

மூன்றாம் கட்டத்திற்கு மாற, சராசரியாக தினசரி 2,000-க்கும் அதிகமான வழக்கு, ஐ.சி.யூ.வில் போதுமான திறன் மற்றும் மலேசியர்களில் 40 விழுக்காட்டினர் முழு அளவிலான தடுப்பூசி பெற்ற பிறகு நடைபெறும். இது செப்டம்பரில் அடையப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.