ஜஃப்ருல் : மக்களுக்கும் வணிகத்திற்கும் உதவுவதற்கான சரியான நேரம் இது

தேசிய மீட்புத் திட்டம் (பிபிஎன்) மீண்டும் செயல்படுத்தப்பட்டதை அடுத்து, முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட மக்களுக்கும் வணிகங்களுக்கும் உதவும் திட்டங்களை அரசாங்கம் மீண்டும் செயல்படுத்தும் என்று நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.

அரசாங்கம் ஒருபோதும் மக்களுக்கு உதவுவதை நிறுத்தவில்லை என்றும், எப்போதும் ஒரு பொதுவான தீர்வைப் பற்றி சிந்திக்க முயற்சிப்பதாகவும் தெங்கு ஜஃப்ருல் கூறினார்.

“பிபிஎன் மீண்டும் செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட உதவித் திட்டங்களை அரசாங்கம் திருப்ப செய்வதற்கான சரியான தருணம் இது,” என்று அவர் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்தார்.

ஊழியர் சேமநிதி வாரியம் (இபிஎஃப்) மற்றும் தேசிய வங்கியுடனான தனது கலந்துரையாடல்கள் இந்த வாரம் நடைபெற்றதாக அவர் கூறினார்.

“கடந்த ஆண்டு, வரலாற்றில் முதன்முறையாக ஐ-லெஸ்தாரி, ஐ-சினார் மற்றும் கோவிட் -19 சவாலை எதிர்கொள்ள மக்களுக்கு உதவும் ஒரு தானியங்கி கடன் ஒத்திவைப்பு ஆகியவற்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.

“இதுபோன்ற திட்டங்களை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நாடு நாம்தான். முதலில், கருத்து வேறுபாடுகளால் அது தள்ளப்பட்டது,” என்று அவர் கூறினார்.

இருப்பினும், அதன் பின்னர், அவர்களில் சிலர் அதனால் மக்களுக்கு ஏற்படும் சாதகமான தாக்கத்தை அறிந்து, ஆதரிக்கத் தொடங்கினர் என்றும் தெங்கு ஜஃப்ருல் கூறினார்.

ஐ-சினார் என்பது கோவிட் -19 நெருக்கடியின் போது பாதிக்கப்பட்ட இபிஎஃப் உறுப்பினர்களுக்கு கணக்கு 1-லிருந்து பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான வசதி.

ஐ-லெஸ்தாரி என்பது இபிஎஃப் கணக்கு 2-லிருந்து பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான ஒரு திட்டமாகும்.

கடன் ஒத்திவைப்பு (மொராட்டோரியம்) என்பது மாதாந்திக் கடன் தவணைகளை வங்கிக்குச் செலுத்துவதிலிருந்து அதிகாரப்பூர்வமாக நிறுத்தி வைப்பதாகும்.

-பெர்னாமா