‘பள்ளி துப்புரவு தொழிலாளர்களின் சம்பளத்தைக் குறைக்க வேண்டாம்’

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது (பி.கே.பி.), பள்ளி துப்புரவு தொழிலாளர்கள் பலரின் குறைந்தபட்ச ஊதியம் குறைக்கப்படுவதாக, அரசு ஒப்பந்தத் தொழிலாளர் வலையமைப்பு (ஜே.பி.கே.கே) கூறியது.

பி.கே.பி.யின் போது தொழிலாளர்கள் வருகை குறைவு என்பதால், துப்புரவுத் தொழிலாளர்களின் சம்பளத்தை மாவட்டக் கல்வி இலாகா (பிபிடி) குறைத்துள்ளதாக அவர்களின் குத்தகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“பல பள்ளி துப்புரவாளர்கள், பி.கே.பி.யின் போது அவர்களது சம்பளம் கழிக்கப்பட்டதாக எங்களிடம் புகார் அளித்தனர். எல்லோரும் ஒவ்வொரு நாளும் வேலை செய்ய வேண்டியதில்லை என்பதால், பிபிடி ஒதுக்கீட்டைக் குறைத்த காரணத்தினால், ஒப்பந்தக்காரர்களும் குறைத்ததாகக் கூறப்படுகிறது.

“ஆனால், குறைந்தபட்ச சம்பளத்தைப் பி.கே.பி.யின் போது குறைக்கக்கூடாது என, நேற்று கீச்சகம் வழியாக ஜே.பி.கே.கே. தெரிவித்தது.

குவாந்தானைச் சேர்ந்த ஓர் ஒப்பந்தத் தொழிலாளி, கல்வி அமைச்சால் நிர்ணயிக்கப்பட்ட 60 விழுக்காடு தொழிலாளர்களின் வருகையின் அடிப்படையில் அவர்களின் சம்பளம் 40 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

பி.கே.பி.யின் போது, ஊதியம் பெறாத கட்டாய விடுப்பு எடுக்க வேண்டி இருந்தது என்று மேலும் மூன்று தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

மற்றொரு கீச்சகச் செய்தியில், கல்வி அமைச்சின் வழிகாட்டுதல்களை ஜே.பி.கே.கே. காட்டியது, அதில் 60 விழுக்காடு துப்புரவுத் தொழிலாளர்கள் தற்போதைய தேவைகளின் அடிப்படையில், ஒப்பந்தக்காரர் மற்றும் வளாக நிர்வாகியின் ஒப்புதலுடன் வேலை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மனிதவள அமைச்சின் பி.கே.பி. வழிகாட்டுதல்களையும் ஜே.பி.கே.கே. பகிர்ந்தது, அதில் முதலாளிகள் தங்கள் ஊழியர்களுக்கு முழு சம்பளத்தைப் பி.கே.பி.யின் போது செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சலுகை கடிதம், சேவை ஒப்பந்தம் அல்லது சமீபத்திய ஊதிய உயர்வு ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, முதலாளிக்கும் பணியாளருக்கும் இடையில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஊதிய விகிதத்தின் அடிப்படையில் தினசரி பணியாளர் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

இதற்கு, கல்வி அமைச்சும் அதன் அமைச்சர் ராட்ஸி ஜிடினும் பொறுப்பேற்க வேண்டும், பள்ளி துப்புரவு தொழிலாளர்களின் சம்பளத்தைக் குறைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் ஜே.பி.கே.கே. கேட்டுக்கொண்டது.