கே.ஜே. : சிலாங்கூர் வழங்கிய தரவுகளின் அடிப்படையிலேயே தடுப்பூசி வழங்குகிறோம்

மலேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் (பிக்) கைரி ஜமாலுதீன், சிலாங்கூருக்கு வழங்கப்பட்ட கோவிட் -19 தடுப்பூசிகளின் எண்ணிக்கை மந்திரி பெசார் அமிருட்டின் ஷாரியுடனான சந்திப்பின் போது வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அமைந்தது என்றார்.

ஜூன் மாதத்தில், சிலாங்கூர் மாநில அரசின் தடுப்பூசி திறன் ஒரு நாளைக்கு 40,000 ஊசிகள் மட்டுமே என்று அவர்களிடம் தெரிவிக்கப்பட்டதாக கைரி கூறினார்.

எனவே, சிலாங்கூர் மாநிலப் பொது சுகாதாரம், ஒற்றுமை, மகளிர் மற்றும் குடும்ப மேம்பாடு ஆட்சிக்குழு உறுப்பினர், டாக்டர் சித்தி மரியா மஹ்மூத், எங்கள் தரப்பு அம்மாநிலத்திற்குப் போதுமான தடுப்பூசிகளை வழங்கவில்லை என்று ஏன் கூறினார் என்று கைரி கேள்வி எழுப்பினார்.

“உண்மையில், நாங்கள் தடுப்பூசிகளை அனுப்புகிறோம், சிலாங்கூர் மாநிலத்தில் இன்னும் மீதம் உள்ளது, மேலும் அதிகமான தடுப்பூசிகளை அனுப்ப நாங்கள் விரும்புகிறோம். எனவே, நாங்கள் அவர்களின் திறனைப் பார்க்கிறோம்.

“இரண்டு வாரங்களுக்கு முன்பு, நான் சிலாங்கூர் மந்திரி பெசாரைச் சந்தித்தேன், அப்போது சிலாங்கூர் அரசாங்கமே, ஜூன் மாதத்திற்கான சிலாங்கூரின் திறன் ஒரு நாளைக்கு 40,000 ஊசிகள் என்று கூறியது.

“சிலாங்கூர் மந்திரி பெசருடனான எனது சந்திப்பின் போது (சித்தி மரியா) ஏன் கலந்து கொள்ளவில்லை என்று எனக்குத் தெரியவில்லை,” என்று அவர் தஞ்சோங் காராங் உழவர் மேலாண்மை நிறுவனத்தில், இன்று புதிய தடுப்பூசி மையத்திற்கு (பிபிவி) வருகை செய்த பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

நேற்று, கைரியின் இரண்டு ஆலோசகர்கள், சித்தி மரியா மஹ்மூத் மாநிலத்தில் தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை என்று விமர்சித்ததற்குப் பதிலளித்தனர்.

சிறப்பு ஆலோசகர் (அறிவியல்) கோவ்ஸ் அஸ்ஸாம் மற்றும் தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய ஆலோசகர் டிமிஷ்ட்ரா சித்தம்பலம் கூறுகையில், சிலாங்கூரில் தடுப்பூசி பயன்பாட்டு விகிதம் தற்போது 75.2 விழுக்காடாக உள்ளது, இது நாட்டின் மிகக் குறைவான ஒன்றாகும்.

பினாங்கு 90.34 விழுக்காடு, கோலாலம்பூர் 87.12 விழுக்காடு, திரெங்கானு 90.86 விழுக்காடு என பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் என்றனர்.

எவ்வாறாயினும், ஜூலை மாதத்தில், சிலாங்கூர் ஒரு நாளைக்கு 130,000 மருந்தளவுகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், மாநிலத்திற்கு வழங்கப்படும் கோவிட் -19 தடுப்பூசிகளின் எண்ணிக்கையும் இலக்கிற்கு ஏற்ப அதிகரிக்கப்படும் என்றும் கைரி கூறினார்.