வர்க்க அடிப்படையில் இல்லாமல், அனைவருக்கும் 6 மாதக் கடன் ஒத்திவைப்பு

சமூக வர்க்கத்தைப் பொருட்படுத்தாமல், அனைத்து தனிநபர் கடனாளிகளுக்கும், மைக்ரோ தொழில்முனைவோருக்கும் வங்கிக் கடன்களுக்காக ஆறு மாதக் கால அவகாசம் வழங்கப்படும்.

ஜூலை 7 முதல், அதற்கு விண்ணப்பங்கள் செய்யலாம்.

அதிக வருமானக் குறைப்பு நிபந்தனைகள், வேலை இழப்பு மறுஆய்வு அல்லது ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டியதில்லை, அதற்குப் பதிலாக, விண்ணப்பதாரர் விண்ணப்பம் செய்து, சம்பந்தப்பட்ட கடன் விதிமுறைகளைத் திருத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.

“வங்கிகளின் ஒத்துழைப்புடன், பி40, எம்40 அல்லது தி20 குழுமங்கள் மற்றும் மைக்ரோ தொழில்முனைவோர் என அனைத்து தனிப்பட்ட கடன் வாங்கியவர்களுக்கும், ஆறு மாதக் கால கடன் ஒத்திவைப்பு வழங்கப்படும் என்று அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

“வருமானக் குறைந்துவிட்டதா, வேலையை இழந்துவிட்டீர்களா என்பது பற்றிய மறுஆய்வு மற்றும் விண்ணப்பத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் போன்ற எந்தவொரு நிபந்தனைகளும் இனி இல்லை.

“நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும், ஒப்புதல் தானாக வழங்கப்படும்,” என்று பிரதமர் முஹைதீன் யாசின் RM150 பில்லியன் மக்கள் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மறுவாழ்வு தொகுப்பு (பெமுலே) உதவியை அறிவிக்கும் போது கூறினார்.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (எஸ்.எம்.இ.), கடன் ஒத்திவைப்பு (மொராட்டோரியம்) வசதி வங்கியின் மதிப்பாய்வு மற்றும் ஒப்புதலுக்கு உட்பட்டது.

பி.டி.பி.டி.என். கடன் கொடுப்பனவுகள் ஒத்திவைப்பு

இது தவிர, தேசிய உயர்க்கல்வி நிதி நிறுவனம் (பி.டி.பி.டி.என்), பொது சேவைத் துறை (ஜே.பி.ஏ.), மஜ்லிஸ் அமானா ரக்யாட் (மாரா) மற்றும் பெர்பாடானான் தாபோங் பெம்பங்குனான் கெமாஹிரான் (பி.டி.பி.கே.) போன்ற, அரசு நிறுவனங்களுக்கான கல்விக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதையும் ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்தது.

RM400 மில்லியன் மதிப்பு கொண்டது என மதிப்பிடப்பட்டுள்ள இத்திட்டம் 1.6 மில்லியன் மக்களுக்குப் பயனளிக்கும் என நம்பப்படுகிறது.

கூடுதலாக, காப்பீடு மற்றும் தக்காஃபுல் பாலிசிதாரர்கள், காப்பீட்டு பிரீமியங்கள் மற்றும் தக்காஃபுல் பங்களிப்புகள் (விரும்பினால்) செலுத்துவதையும் ஒத்திவைக்க விண்ணப்பிக்கலாம், இது 2021 டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்படும்.

இது பாலிசிதாரர்கள் மற்றும் ஆயுள் காப்பீடு மற்றும் குடும்ப தக்காஃபுல் சான்றிதழ்களை உள்ளடக்கியது.