ஐ-சித்ரா என்ற பணத்தைத் திரும்பப் பெறும் திட்டத்தை, ஊழியர் சேமநிதி வாரியம் (இபிஎஃப்) அறிமுகப்படுத்தும் என்று பிரதமர் முஹைதீன் யாசின் இன்று அறிவித்தார்.
ஐ-சித்ரா மூலம், மொத்தம் 12.6 மில்லியன் இபிஎஃப் உறுப்பினர்கள் ஐந்து மாதக் காலத்திற்கு, மாதம் ஒன்றுக்கு RM1,000 என்ற நிலையான கட்டண விகிதத்துடன் RM5,000 வரை திரும்பப் பெற முடியும்.
“கோவிட் -19 தொற்றுநோய் சவால்களை எதிர்கொள்ள, மக்களுக்கு உதவுவதற்காக ஐ-லெஸ்தாரி, ஐ-சினார் மற்றும் தானியங்கி கடன் ஒத்திவைப்பு திட்டங்களைச் செயல்படுத்த இந்த அரசு முதலில் முன்மொழிந்தது.
“உலகில் இதுபோன்ற முயற்சிகளை அறிமுகப்படுத்திய முதன்மை நாடுகளில் நாமும் ஒருவராக இருக்கிறோம்.
“இது ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, மக்களின் பணப்புழக்கத்திற்கும் உதவியுள்ளது,” என்று அவர் இன்று, RM150 பில்லியன் மக்கள் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மறுவாழ்வு தொகுப்பை (பெமுலே) அறிவிக்கும் போது கூறினார்.
அவரைப் பொறுத்தவரை, 30 பில்லியன் தொகையில் ஐ-சித்ராவை அமல்படுத்துவது, மக்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இபிஎஃப் உறுப்பினர்கள், 2021 ஜூலை 15-ம் தேதி முதல், இணையம் வழி ஐ-சித்ரா icitra.kwsp.gov.my தளத்தில் பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்க ஆரம்பிக்கலாம். முதல் தொகை ஆகஸ்ட் 2021-இல் உறுப்பினரின் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இபிஎஃப் பணத்தைத் திரும்பப் பெறுவது மோசமான முடிவு என்பதை அரசாங்கம் அறிந்திருப்பதாகவும் அவர் சொன்னார்.
“இது ஒரு மோசமான முடிவு என்பதை அரசாங்கம் அறிந்திருக்கிறது, இது மக்களின் முதிய வயதுக்கான சேமிப்பு, ஆனால், ஐ-சித்ரா இன்றைய அவசர தேவைகளுக்கான ஒரு தீர்வு, மேலும் திரும்பப் பெறத் தேவையில்லாத இபிஎஃப் உறுப்பினர்களுக்கு நியாயமான வருமானம்,” என்றார் அவர்.