`பெமுலே` : இன்னும் பற்றாக்குறை உள்ளது – நஜிப்

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், மக்கள் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மீட்பு தொகுப்பில் (பெமுலே) இன்னும் சில “குறைபாடுகளை மேம்படுத்த வேண்டும்” என்று கூறினார், குறிப்பாக கடன் ஒத்தி வைப்புக்கான கோரிக்கை.

“எட்டாவது பிரதமர் (முஹைதீன் யாசின்) அறிவித்த கடன் ஒத்திவைப்பு தானியங்கி தடை அல்ல; மேலும் அது வட்டியற்றதும் அல்ல.

“வங்கிகள் ஒரு சதத்தையும் இழக்கவில்லை. உண்மையில் அவை அதிக இலாபம் ஈட்டும்,” என்று அவர் தனது முகநூல் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல், முஹைதீனின் RM150 பில்லியன் மதிப்புள்ள `பெமுலே` தொகுப்பு அறிவிப்பு குறித்து நஜிப் கருத்து தெரிவித்தார்.

அந்தப் பெக்கான் எம்.பி.யின் கூற்றுப்படி, கடன் ஒத்திவைப்பு தானாகவே வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ள போதும், சாதாரண கடனாளிகள் இன்னும் விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. அதேபோல, சிறு மற்றும் நடுத்தர வணிக (எஸ்.எம்.இ.) பிரிவு கடனாளிகள் கடன் ஒத்திவைப்பைப் பெறுவதற்கு மறுஆய்வு மற்றும் வங்கியின் ஒப்புதல் தேவைப்படுகிறது.

“இருப்பினும், புதிய விதிமுறைகள் திருத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும், மேலும், கடன் வாங்கியவரின் கட்டணக் காலம் இன்னும் பல ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்பதையே இது பிரதிபலிக்கிறது, ஆனால் தடை காலம் 6 மாதங்கள் மட்டுமே என்றாலும், வங்கி எந்தவொரு வட்டி கட்டணத்திற்கும் விலக்கு அளிக்கவில்லை.

“கடந்த ஆண்டு முதல், கடன் வாங்கியவர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களில் இவையும் அடங்கும், வங்கிகள் தற்போதைய இறுக்கத்தைப் பயன்படுத்தி தங்களை ஏமாற்றியதாக மக்கள் உணர்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.

வாடகை கொள்முதல் கடன்களுக்கான வட்டி மற்றும் அபராதங்கள் (ஆனால் பிற கடன்களுக்கு அல்ல) கடந்த ஆண்டைப் போல, இம்முறை தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும் நஜிப் கூறினார்.

“1997-1998 நெருக்கடியில் அரசாங்க பிணை எடுப்புக்களால் மீட்கப்பட்ட வங்கிகளும், கடந்த 10 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான பில்லியன் இலாபம் ஈட்டிய வங்கிகளும், இந்த மிகக் கடினமான நேரத்தில், கடனாளிகள் இதுவரை அளித்து வந்த ஆதரவை ஈடுசெய்ய, வட்டி விலக்கு அல்லது ஆறு மாதத் தடைக்கு 50 விழுக்காடு வரை வட்டி தள்ளுபடி வழங்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

நாடு பி.கே.பி.யின் கீழ் இருக்கும் வரை, “கடன்களைத் திருப்பிச் செலுத்துமாறு தினசரி அழைப்புகள் மூலம் கடன் வாங்கியவர்களை அச்சுறுத்துவதை” நிறுத்துமாறு அரசாங்கம் வங்கிகளுக்கு வலியுறுத்த வேண்டும் என்றும் நஜிப் தெரிவித்தார்.