கைதி மரணம் : முழுமையான பிரேதப் பரிசோதனைக்கு வழக்கறிஞர் வலியுறுத்து

கொலை வழக்கு ஒன்றின் விசாரணைக்காக காத்திருந்த வேளையில், சுங்கை பூலோ சிறைச்சாலையில் ஒன்பது மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பள்ளி மூடுந்து ஓட்டுநர் ஒருவர் நேற்று மருத்துவமனையில் இறந்துபோனார் என்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் எம் மனோகரன் தெரிவித்துள்ளார்.

வயிற்று வலிக்குச் சிகிச்சை பெற அழைத்துச் செல்லப்பட்டவர், நேற்று மருத்துவமனையில் இறந்ததாக மனோகரன் தெரிவித்துள்ளார்.

இன்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, ​​பாதிக்கப்பட்ட 29 வயதான மொஹமட் இக்பால் அப்துல்லாவின் உடலில் முழுமையான பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டும் என்று அவர் கோரினார்.

“அவர் மீதான அதிகார அத்துமீறல் மற்றும் தாக்குதல் தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளை அறிய, முழுமையான பிரேதப் பரிசோதனை செய்ய விரும்புகிறேன் – ஒன்று, 2020 செப்டம்பரில், தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது ஒரு காவல்துறை அதிகாரி, ​​அடுத்தது, இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு வார்டன் (சிறை),” என்று மனோகரன் கூறினார்.

சிலாங்கூர், செலாயாங்கில் வசித்து வந்த, இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான இக்பால் மீது, தடுத்து வைக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, தனது இரண்டு அண்ணன்கள் உட்பட 20 பேருடன் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

பாதிக்கப்பட்டவர், அன்றிலிருந்து வயிற்று வலி குறித்து புகார் அளித்து வந்துள்ளதாக மனோகரன் கூறினார்.

இக்பாலின் மரணம் குறித்து அறிவிக்கப்பட்ட பின்னர், அவரது குடும்பத்தினருக்குச் சுங்கை பூலோ சிறைச்சாலையிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, இக்பால் மருத்துவமனைக்கு அனுப்புவதற்கு முன்பு பார்த்த, அவர்களுக்குத் தெரிந்த சக கைதியிடமிருந்து என்று மனோகரன் கூறினார்.

“சிறை கிளினிக்கில், நேற்று காலை சக்கர நாற்காலியில் இக்பாலைப் பார்த்ததாகக் கைதி கூறினார். வயிற்றுப் பிரச்சினைகளுக்காக மருத்துவ நிபுணரைச் சந்திக்க இக்பால் சிறையிலிருந்து தஞ்சோங் காராங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்று அவர் கூறினார்.

அந்தத் தொலைபேசி உரையாடலின் மூலம்தான், இக்பால் மீது 2020 செப்டம்பர் மற்றும் மூன்று வாரங்களுக்கு முன்பு அதிகார அத்துமீறல் நடந்ததையும், அவர் தாக்கப்பட்டதையும் அவரது குடும்பத்தினர் கண்டுபிடித்தனர்.

“இக்பால் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒவ்வொரு முறையும் வயிற்று வலி இருப்பதாகப் புகார் செய்துள்ளார் (அங்கு அவரது குடும்பத்தினர் அவரைச் சந்தித்தனர்). அவரது மனைவி இக்பாலைக் கடைசியாக 2021 பிப்ரவரியில் பார்த்துள்ளார். இக்பால் எடை குறைந்து, பலவீனமாகவும் மிகச் சோர்ந்து போயும் காணப்பட்டதாக அவர் (மனைவி) கூறினார்.

“அவர் தாக்கப்பட்டிருக்கலாம் என்று குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர்,” என்று அவர் மேலும் கூறினார்.

31 மற்றும் 32 வயதான இக்பாலின் அண்ணன்கள், தற்போது போகோக் சேனா சிறையில், குற்றத் தடுப்புச் சட்டம் (போகா) 1959-இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தனது கணவருக்கு மருத்துவச் சிகிச்சையைப் புறக்கணித்ததற்காக விசாரணை அதிகாரி, சிறை மற்றும் மருத்துவமனை அதிகாரிகளுக்கு எதிராக, இக்பாலின் மனைவி நுர்ஷம்சியா யகத்தலி (28) நேற்று போலீஸ் புகார் அறிக்கை பதிவு செய்தார்.

மலேசியாகினி பார்த்த அந்தப் போலீஸ் அறிக்கையில், மூலநோயால் பாதிக்கப்பட்டு, உடல்நலக்குறைவில் இருந்த தனது கணவருக்கு உடனடியாக மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று நுர்ஷம்சியா கூறினார்.

இக்பால் சுங்கை பூலோ மருத்துவமனையில் இருந்து, தஞ்சோங் காராங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், ஆனால் தனது கணவருக்கு ஜூன் 20-ம் தேதி மட்டுமே மேலதிக சிகிச்சை வழங்கப்படும் என்று தஞ்சோங் காராங் மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் சொன்னதாக அவர் கூறினார்.

மேலதிக சிகிச்சைக்கான தேதி மிகவும் தாமதமானதால், தனது கணவரின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது என்று நுர்ஷம்சியா கருதுகிறார்.

2020, செப்டம்பர் 28-ம் தேதி இக்பால் கைது செய்யப்பட்டதிலிருந்து, சிறை அதிகாரிகளால் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில், உடனடியாக மலேசியச் சிறைச்சாலைத் துறை தலைமை இயக்குநர் இப்ரிசம் அப்துல்  இரஹ்மானை இராஜினாமா செய்யுமாறு மனோகரன் நேற்று ஓர் அறிக்கையில் வலியுறுத்தினார்.

“தவறான தடுப்புக்காவலுக்காக, கோம்பாக் மாவட்டப் போலிஸ் தலைமையகத்திலிருந்து ஓர் அதிகாரியைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் நான் அழைப்பு விடுக்கிறேன், அவரது மனைவியின் கூற்றுப்படி, இது காவல்துறையினரால் புனையப்பட்ட வழக்கு, அவரது கணவரால் அது செய்யப்படவில்லை.

“நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கொலை வழக்குகள் குறித்து விசாரிக்க தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுனை நான் கேட்டுக்கொள்கிறேன், அவை துணை அரசு வழக்கறிஞரின் வேண்டுகோளின் பேரில் பலவீனமான காரணங்களுக்காகத் தேவையற்ற முறையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.

மேலும் தகவல் அறிய, மலேசியாகினி காவல்துறையையும் சிறைத் துறையையும் தொடர்புகொள்ள முயற்சித்து வருகிறது.