பூமி புத்ரா மருத்துவர்களை மட்டுமே நிரந்தர பணியாளர்களாக ஆக்கவேண்டும் என்ற பரிந்துரையை சில இனவாத கும்பல்கள் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளதாகச் செய்திகள் வந்தன . இந்த செய்தி மருத்துவ துறையில் பூமி புத்ரா அல்லாதவர்கள் செய்த மாபெரும் பணியை அவமதிக்கும் விதமாக இருக்கிறது என்கிறார் குலசேகரன். அவரின் முழுமையான செய்தி வருமாறு.
ஐந்து வருடங்கள் பல லட்சம் வெள்ளி செலவு செய்து மருத்துவ படிப்பைப் பயின்று நாட்டிற்குச் சேவை செய்ய துடிக்கும் பயிற்சி மருத்துவர்களுக்கு இந்த அரசாங்கம் வழங்கும் வாய்ப்புகள் மிகவும் நியாயமற்றவையாக உள்ளன. நாட்டில் மருத்துவர்கள் , மற்ற சுகாதார பணியாளர்களின் தேவை இந்த கோவிட் காலக் கட்டத்தில் அதிகரித்துள்ளது என்பதை ஒத்துக்கொள்ளும் அரசாங்கம் , அவர்கள் நலன் காப்பதில் மட்டும் கோட்டை விட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ படிப்பு முடிந்ததும் பயிற்சி மருத்துவர்கள் UD 41 திட்டத்தின் கீழ் பணியில் சேர்க்கப்பட்டு ஆரம்ப சம்பளமாக RM2,900 யும் படித்தொகையாக RM 1,600 யுடன் சேர்த்து ஏறக்குறைய RM 4500 பெற்று வந்தார்கள். இரண்டு வருடங்கள் கட்டாய பயிற்சியை முடித்த பிறகு அவர்களுக்கான சம்பளம் RM 700 முதல் RM1000 வரை கூடுதலாக உயர்த்தப்பட்டு UD 44 திட்டத்தின் கீழ் நிரந்தரமாக்கப்படுவார்கள்.
அதன் பின்னர் , அவர்கள் நிபுணத்துவ பயிற்சிக்காகவும் மேற்படிப்பிற்காகவும் செல்வதென்றால் அதற்கு அரசாங்கத்தில் வாய்ப்பளிக்கப்பட்டு வந்தது . இதனுடன் சேர்த்து மற்ற சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டன .
இப்பொழுதுள்ள திட்டத்தின் கீழ் மருத்துவ படிப்பு முடிந்தவுடன் மருத்துவர்கள் குத்தகை (ஒப்பந்த) அடிப்படையில் பணி அமர்த்தப்படுகின்றார்கள். இவர்கள் 2 வருடம் பயிற்சியை முடித்த பிறகு அடுத்த 2 அல்லது 3 வருடங்களுக்கு U43 திட்டத்தின் கீழ்க் குத்தகை மருத்துவ அதிகாரிகளாக வேலையைத் தொடர்கிறார்கள்.
இந்த திட்டத்தின் கீழ் அரசாங்கம் வழங்கும் வீட்டுக் கடனுக்கோ , கார் கடனுக்கோ தகுதி பெறுவதில்லை.மேற் படிப்பு தொடரமுடியாது , உம்ரா வுக்கோ ஹஜ் போகவோ சிறப்புப் பேறு கால விடுமுறைகள் கிடையாது , அரசாங்க உபகாரச் சம்பளம் பெற்றவர்களுக்கும் அரசாங்க பல்கலைக்கழகங்களில் படித்த மருத்துவ மாணவர்களுக்கும் இதே நிலைமைதான்.
திருமணத்திற்கு திட்டமிட்டிருக்கும் பல மருத்துவர்கள் இந்த இரண்டும் கெட்டான் நிலைமையினால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
உலக சுகாதார நிறுவனத்தின் நிர்ணயப்படி 500 பேருக்கு 1 மருத்துவர் என்னும் இலக்கை தாண்டி மலேசியாவில் தற்போது 458 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது
நாட்டில் போதுமான மருத்துவர்கள் உள்ளனர் என்பது இருந்தாலும் , இவர்களின் சேவை மக்களை முழுமையாகப் போய்ச் சேருவதில்லை என்பதுதான் உண்மை, காரணம் மக்கள் பெருக்கத்திற்கேற்ப போதுமான மருத்துவ மனைகள் இல்லை. சிறு சிறு பட்டனங்கள் வளர்ச்சி அடைந்து மக்கள் தொகை பெருகும் போது இதற்கு ஈடாக மருத்துவமனைகள் கட்டப்படுவதில்லை. பல மருத்துவ மனைகளில் மக்கள் மருத்துவரைக் காணப் பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
பல வேலைகளில் நோயாளிகள் காலை 6 மணிக்கெல்லாம் பதிவு செய்வதற்காக மருத்துவமனையில் காத்து கொண்டிருக்கிறார்கள். கொள்கை அளவில் அரசாங்கம் மருத்துவத் துறையில் தூர நோக்கு சிந்தனை கொண்ட ஆள்பல திட்டம், மருத்துவமனை விரிவாக்கத் திட்டம் போன்றவற்றை வகுக்க வேண்டும் . போதுமான மருத்துவர்கள் இருக்கின்றார்கள் என்று சொல்லும் பட்சம் ஒரு திருப்திகரமான மருத்துவ சேவையை நம்மால் ஏன் வழங்க முடியலை என்பது பற்றி ஆய்வு நடத்த வேண்டும்.
சமீபத்தில் பூமி புத்ரா மருத்துவர்களை மட்டுமே நிரந்தர பணியாளர்களாக ஆக்கவேண்டும் என்ற பரிந்துரையை சில இனவாத கும்பல்கள் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளதாகச் செய்திகள் வந்தன . இந்த செய்தி மருத்துவ துறையில் பூமி புத்ரா அல்லாதவர்கள் செய்த மாபெரும் பணியை அவமதிக்கும் விதமாக இருக்கிறது. பூமி புத்ரா மருத்துவர்கள் மட்டும் நிரந்தர பணியாளராகச் சேர்க்க வேண்டும் என்ற முடிவு அமைச்சரவையில் எடுக்கப்பட்டதா என்பதைப் பிரதமர் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் குத்தகை அடிப்படையில் வேலைக்கமர்த்தப்பட்ட எல்லா மருத்துவர்களையும் மற்ற மருத்துவ பணியாளர்களையும் நிரந்தரமாக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறன் என்கிறார் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் மு குலசேகரன்.