தேசியப் புனர்வாழ்வு திட்டத்தின் 2-ஆம் கட்டத்தில், சுற்றுலா மற்றும் தங்கும் விடுதிகள் தொழிற்துறையை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதிக்க வேண்டுமென்று மலேசியக் கேளிக்கை பூங்கா மற்றும் குடும்பப் பொழுதுபோக்கு மையங்களின் சங்கம் (எம்.எ.எ.தி.எஃப்.அ) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
2-வது கட்டத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்ட பேரங்காடிகள், உல்லாசப் போக்கிடம் மற்றும் தங்கும் விடுதிகளைப் போலவே, கேளிக்கை பூங்காக்கள், குடும்பப் பொழுதுபோக்கு மையங்கள், விளையாட்டு மைதானங்கள், சினிமாக்கள் போன்றவையும் கருதப்பட வேண்டும் என்று அச்சங்கம் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2020-ல், சுற்றுலாத்துறையின் வருவாய் 80.9 விழுக்காடு குறைந்துள்ள நிலையில், அது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்பதால் இது அவசியம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
2018-ஆம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத்துறை மூன்றாவது பெரிய பங்களிப்பாளராக இருந்தது – சுமார் 13.1 விழுக்காடு முதல் 14.2 விழுக்காடு வரை – இது ஒரு பெரிய வேலைவாய்ப்பு ஆதாரமாகவும் இருந்தது – 2019-ஆம் ஆண்டில் மொத்தத்தில் 3.6 மில்லியன் அல்லது 23.6 விழுக்காடாக அது இருந்தது.
இதற்கிடையில், சுற்றுலாத்துறை நிதி திட்டத்திற்குத் தீர்வுகாண சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சை அனுமதிக்குமாறும் சங்கம் வலியுறுத்தியது.
இந்தத் திட்டத்திற்குச் சங்கம் நன்றி தெரிவித்தாலும், இது சமீபத்திய இடை-பொருளாதாரத் தூண்டுதல் நடைமுறைப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைப்பு அறிக்கையின் (லக்சானா) அடிப்படையில், குறைந்த செயல்திறன் கொண்ட ஒரு முயற்சியாகவே இருக்கிறது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
“RM1 பில்லியனில் 6.5 விழுக்காடு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஜூன் 4 நிலவரப்படி, இந்த நிதிக்கு 666 விண்ணப்பங்கள் இருந்தன, மொத்தத்தில் 327 விண்ணப்பங்கள், RM65.1 மில்லியன் மொத்த நிதியுடன் ஒப்புக் கொள்ளப்பட்டன.
2021-ஆம் ஆண்டு, சுற்றுலாத்துறைக்கான அனைத்து சட்டரீதியான தேவைகளையும் – வருடாந்திர உரிம புதுப்பித்தல், வாகனச் சோதனைகள், நிறுத்தக் கட்டணம், ஈபிஎஃப் பங்களிப்புகள் மற்றும் சேவை வரி போன்றவற்றை – முடக்குமாறும் அச்சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியது.