கைரி : 400-க்கும் மேற்பட்ட நாடாளுமன்றப் பணியாளர்கள் தடுப்பூசி பெறத் தொடங்கியுள்ளனர்

400-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற ஊழியர்களுக்கான தடுப்பூசி செயல்முறை, தலைநகரைச் சுற்றியுள்ள பல தடுப்பூசி மையங்களில் (பிபிவி) இன்று தொடங்கியது என்று தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் (பிக்) கைரி ஜமாலுதீன் தெரிவித்தார்.

மக்களவை, மேலவை அமர்வுகள் விரைவில் நடைபெறச் செய்வதற்கான முயற்சிகளில் இதுவும் அடங்கும் எனக் கைரி கூறினார்.

“ஒவ்வொரு நாடாளுமன்ற ஊழியருக்கும், தொற்றுநோயைத் தடுக்க சரியான பாதுகாப்பு கிடைப்பதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம்,” என்று அவர் இன்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபாவுடன் பிக் வளர்ச்சி குறித்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த கைரி, தடுப்பூசி நாடாளுமன்ற ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் உணவு வழங்குநர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து ஊழியர்களையும் உள்ளடக்கியது.

மக்களவைக்கும் மேலவைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வரும் ஊழியர்களும் தடுப்பூசி பெறத் தகுதியுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் விளக்கினார்.

“நாடாளுமன்றம் கூடும் போது, ​​அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

மற்றொரு வளர்ச்சியில், ஜப்பானிய அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியை நாளையும், அமெரிக்காவிலிருந்து ஒரு மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகளை வெள்ளிக்கிழமையும் மலேசியா பெறும் என்று கைரி கூறினார்.

நாட்டில் கோவிட் -19 தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளிலும், உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டத்திற்கு ஆதரவாகவும், மலேசிய அரசாங்கத்தின் மீது அவ்விரு நாடுகளின் அக்கறையைக் குறிக்கும் பங்களிப்பை மலேசியா வரவேற்கிறது மற்றும் பாராட்டுகிறது என்று அவர் தெரிவித்தார்.

“இந்தத் தடுப்பூசிகள் வழங்கல், தேசியப் புனர்வாழ்வு திட்டத்தில் (பிபிஎன்) கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மதிப்புகளை அடைய மலேசியாவிற்கு உதவும். பெறப்பட்ட அனைத்து தடுப்பூசிகளும் உடனடியாக தேவையான பிபிவி-களுக்கு விநியோகிக்கப்படும்,” என்று அவர் சொன்னார்.

-பெர்னாமா