மக்களவை சபாநாயகர் அஸார் ஹருண் மற்றும் மேலவை சபாநாயகர் ரைஸ் யாதிம் இருவரும், ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னதாக, நாடாளுமன்றச் சிறப்பு அமர்வு நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் முஹைதீன் யாசினுக்குப் பரிந்துரைத்துள்ளதாகக் கூறினார்.
நேற்று இஸ்தானா நெகாராவில், யாங் டி-பெர்த்துவான் அகோங், அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் முஸ்தபா பில்லா ஷா உடனான சந்திப்பை அடுத்து, இந்தத் திட்டத்தை அவர்கள் பரிந்துரைத்தனர்.
இன்று ஒரு கூட்டு அறிக்கையில், நேற்றைய அமர்வின் போது, சுல்தான் அப்துல்லா ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு முன்னதாக ஒரு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டதாக அஸார் மற்றும் ரைஸ் தெரிவித்தனர்.
“மாமன்னருடனான சந்திப்பில் பேசப்பட்ட விஷயம் பிரதமருக்கும் தெரிவிக்கப்பட்டது, தற்போதுள்ள சட்ட விதிகளின்படி, 2021 ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு முன்னர், ஒரு சிறப்பு மாநாடு நடத்தப்பட வேண்டும் என்று அவருக்கு முன்மொழியப்பட்டது,” என்று அவர்கள் கூறினர்.
நேற்றைய அமர்வில், அஸார் மற்றும் ரைஸ் தவிர்த்து, மேலவை துணை சபாநாயகர், செனட்டர் மொஹமட் அலி மொஹமட் மற்றும் மக்களவையின் இரண்டு துணை சபாநாயகர்கள் மொஹமட் ரஷீத் ஹஸ்னோன் மற்றும் அஸலினா ஓத்மான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த அமர்வு அவசரகாலப் பிரகடனம் மற்றும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வழங்கப்பட்ட அவசரக் கட்டளைகளைச் செயல்படுத்த உதவும்.
அவசரகால அமலாக்கத்தைத் தொடர்ந்து, ஜனவரி 11 முதல் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற அமர்வுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
ஜூன் 16-ம் தேதி, மலாய் ஆட்சியாளர்களுடன் ஒரு சிறப்பு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர், “கூடிய விரைவில்” நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு மன்னர் வலியுறுத்தினார்.
ஜூன் 25-ம் தேதி, ரைஸ் மற்றும் அஸார் இருவரும் நாடாளுமன்றத்தை நேரடி மற்றும் நேரலையில் (ஹைபிரிட்) நடத்த பரிசீலித்து வருவதாகவும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய நேரம் தேவை என்றும் கூறினார்.
ஒரு நாள் கழித்து, இருவரும் மாமன்னர் முன்னிலையில் ஆஜராகுமாறு கட்டளையிடப்பட்டனர்.