ஆதாம்: ஒப்பந்த மருத்துவர்களின் கோரிக்கை அமைச்சரவைக்குக் கொண்டு வரப்படும்

சிறந்த மற்றும் பாதுகாப்பான தொழில் வாய்ப்புகளை விரும்பும் சுகாதார அமைச்சின் ஒப்பந்த மருத்துவ ஊழியர்களின் கோரிக்கைகளை அமைச்சரவை விவாதிக்கும்.

இந்த விவகாரம் தொடர்பாக அரசாங்கம் விரைவில் ஒரு முடிவை எடுக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகச் சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா தெரிவித்தார்.

எனவே, சம்பந்தப்பட்ட அனைத்து ஊழியர்களையும் பொறுமையாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

“சுகாதார துறையில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட மருத்துவ ஊழியர்களின் நிலை குறித்து, நாங்கள் அமைச்சரவையில் விவாதிப்போம், அமைச்சரவை அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

“இது ஒப்பந்த மருத்துவர் திட்டத்தை மிகவும் பயனுள்ளதாக (சாத்தியமானதாக) மாற்ற சில பயன்பாடுகளை உறுதி செய்வதற்காகும்,” என்று அவர் நேற்று ஓர் இயங்கலை செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

ஒப்பந்த மருத்துவர்களிடையே ஹர்த்தால் செய்வதற்கான திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த ஆதாம் இவ்வாறு கூறினார். அவர்கள், மற்றவற்றோடு, தொழில் வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் சுகாதாரத் துறையில் வேலை பாதுகாப்பு இல்லாதது குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

சுகாதார அமைச்சு தற்போது 23,077 மருத்துவ அதிகாரிகள் உட்பட 35,216 ஒப்பந்த ஊழியர்களைக் கொண்டுள்ளது என்று ஆதாம் கூறினார்.

மீதமுள்ள மற்ற ஒப்பந்த ஊழியர்கள் பல் மற்றும் மருந்தக அதிகாரிகள்.

தவிர, சுகாதார அமைச்சு பட்டதாரிகளுக்கான பயிற்சி இடங்களையும் கொண்டுள்ளது, இதில் பட்டம் பெற்ற பயிற்சி டாக்டர்களாக 12,153 அதிகாரிகள் உள்ளனர்.

இந்தக் குழு அவர்களின் பயிற்சி காலத்தில், தகுதி அடிப்படையில் சுகாதார அமைச்சால் நியமிக்கப்படும் என்றார் அவர்.

“ஒப்பந்தத் திட்டத்தில் உள்ள மருத்துவர்களைப் பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

“சம்பளத்தை உயர்த்துவது மற்றும் UD41-லிருந்து UD43 வரை தர நிலைகளைச் சமன்செய்வது போன்றவற்றை நாங்கள் முன்பு செய்தோம். (எனவே) அவர்களின் சம்பளமும் தரநிலையும் வழக்கமான மருத்துவர்களைப் போலவே ஏறத்தாழ இருக்கிறது, அதிக வித்தியாசம் இல்லை.

“அவர்கள் கோரிய சில விஷயங்களை, அமைச்சரவையில் விவாதித்து, அதன் முடிவை (அடிப்படையில்) விரைவில் செயல்படுத்துவோம்,” என்று அவர் கூறினார்.