ஒப்பந்த மருத்துவர்களின் ஹர்த்தால் சுகாதாரச் சேவைகளைப் பாதிக்காது – ஏற்பாட்டாளர்கள்

‘ஒரு நாள் சேவை செய்வதில்லை’ எனும் அவர்களின் திட்டம் சுகாதாரச் சேவைகளைப் பாதிக்காது என்று ஹர்த்தால் ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்தனர்.

ஏனென்றால், அவர்களின் பணியைக் கையாளக்கூடியப் பிற மருத்துவ அதிகாரிகள் அவர்களுக்கு உதவுவார்கள் என்று அக்குழுவின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் முஸ்தபா கமால் அஜீஸ் தெரிவித்தார்.

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்றால், ஜூலை 26-ம் தேதி, நாடு தழுவிய நிலையிலான ஹர்த்தால் அவர்களின் கடைசி முயற்சியாகும் என்று முஸ்தபா கூறினார்.

“துறைத் தலைவர்கள் மற்றும் மருத்துவமனை இயக்குநர்களுடன் இணைந்து, இது எங்கள் திட்டம் என்ற செய்தியை நாங்கள் ஏற்கனவே கூறியுள்ளோம்.

“ஆனால் இது அரசாங்கத்தின் பதிலைப் பொறுத்தது. ஹர்த்தால் உண்மையில் எங்கள் கடைசி முயற்சியாகும்,” என்று அவர் நேற்று ஓர் இயங்கலை செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“அதனால்தான் நாங்கள் அரசாங்கத்திற்கு மூன்று வாரங்கள் அவகாசம் அளித்தோம், ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை என்றால், மன்னிக்கவும், நாங்கள் அதைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

“இது நாட்டின் சுகாதார நலனுக்காகவே,” என்று அவர் மேலும் கூறினார்.

2016 முதல் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 20,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த மருத்துவர்களின் பணியை நிரந்தரமாக்குவது உட்பட, இன்று அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்ட அனைத்து கோரிக்கைகளில் இருந்தும் பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.

குறைந்த எண்ணிக்கையிலான ஒப்பந்த மருத்துவ அதிகாரிகள் பணிக்கு அமர்த்தப்படுவதால், மருத்துவ வல்லுநர்களின் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்தை அரசு மருத்துவமனைகள் எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் எச்சரித்தார். ஐந்து ஆண்டு ஒப்பந்தம் காலாவதியான பின்னர், தங்கள் படிப்பைத் தொடர உதவித்தொகை வழங்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.

தற்போது, காலாவதியான ஒப்பந்த அதிகாரிகள் நிபுணத்துவத் துறையில் தங்கள் படிப்பைத் தொடர தங்கள் சொந்தப் பணத்தைச் செலவளிக்க வேண்டியுள்ளது.

இதற்கிடையில், ஹர்த்தாலில் சேர விரும்பும் மருத்துவ அதிகாரிகள், கடமையில் உள்ள மற்ற சக ஊழியர்களுடன் கலந்துரையாடி, தங்கள் பணி நேரத்தை மாற்றிக்கொள்ளலாம் என்றும் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் டாக்டர் ஃபௌசி இரஹீம் சொன்னார்.

“மருத்துவமனையில், நிபுணத்துவ மருத்துவர்கள், ஆலோசகர்கள், நிரந்தர மற்றும் ஒப்பந்த மருத்துவ அதிகாரிகள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் உள்ளனர்.

“அவர்களுடன் திட்டமிட்டு, கடமை அட்டவணையை ஏற்பாடு செய்யலாம், இதன்வழி அவர்கள் எங்கள் பணி நேரத்தை நிறைவு செய்ய முடியும்,” என்று ஃபௌசி கூறினார்.

“இப்போது கூட, பல நிபுணத்துவ மருத்துவர்களும் ஆலோசகர்களும் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். அவர்கள் எங்கள் திட்டத்தை ஏற்றுக்கொண்டு, ‘உங்கள் கோரிக்கைகலைத் தொடருங்கள், நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்’ என்று கூறுகிறார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.

இந்தத் திட்டத்தினால், மருத்துவமனை செயற்பாடுகளில் மோசமான தாக்கம் ஏற்படாது, குறிப்பாக கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில், ஆனால் ஒப்பந்த மருத்துவ அதிகாரிகள் இல்லாதது கடமையில் உள்ள மற்ற நிரந்தர ஊழியர்களால் உணரப்படும் என்றும் அவர் கூறினார்.

‘கோவிட் -19 மருத்துவமனைகள் பாதிப்படையாது’

அதிக எண்ணிக்கையிலான கோவிட் -19 நோயாளிகளைக் கொண்ட மருத்துவமனைகளின் மருத்துவர்களை ஈடுபடுத்தாமல் இருக்க ஏற்பாட்டாளர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள் என்றும் முஸ்தபா உறுதியளித்தார்.

ஆதரவு வழங்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் ஆபத்து குறித்து கேட்டதற்கு, யாராவது குற்றம் சாட்டப்பட்டால் ஏற்பாட்டாளர்கள் வழக்கறிஞர்கள் குழுவை வழங்க தயாராக இருப்பதாக முஸ்தபா கூறினார்.

நேற்று, சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா, ஒப்பந்த மருத்துவ அதிகாரிகளை அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டார், மேலும் அவர்களின் கோரிக்கைகள் அமைச்சரவைக்குக் கொண்டு செல்லப்படும் என்றும் உறுதியளித்தார்.

இருப்பினும், முஸ்தபா கூறுகையில், முதல் கட்ட ஒப்பந்த மருத்துவ அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன – 2017 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் போது, அப்போதையப் பிரதமர் நஜிப் ரசாக் இதனை முதலில் அறிவித்தார் – ஆனால், அவர்களின் எதிர்காலம் குறித்து நீண்டகால அல்லது குறுகிய கால வரைபடம் எதுவும் சுகாதாரத் துறையில் இல்லை.

“ஐந்து ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்சினை இருந்தால், நீங்கள் எப்படி உணருவீர்கள்?”

ஒப்பந்த மருத்துவ அதிகாரிகளை நிரந்தர ஊழியர்களாக நியமிப்பதற்கான தெளிவான அளவுகோல்கள் எதுவும் இல்லை என்றும், 2016 முதல் 23,077 பேரில் 789 மருத்துவர்கள் மட்டுமே நிரந்தரமாக்கப்பட்டனர், இது மிகவும் குறைந்த விகிதம் என்றும் அவர் கூறினார்.

மலேசிய மருத்துவச் சங்கம் (எம்.எம்.ஏ.) ஹர்த்தால் திட்டத்திலிருந்து விலகி நிற்கிறது, ஆனால், தனது தரப்பும் ஆதரவாளர்களும் நேற்று தொடங்கி (ஜூலை 1), ஜூலை 12 வரை “கோட் பிளாக்” இயங்கலை ஒற்றுமை பிரச்சாரத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிக்கவுள்ளதாக முஸ்தபா தெரிவித்தார்.

“எங்களுக்கு எது நல்லதோ, அதை நாங்கள் ஆதரிப்போம்,” என்று அவர் கூறினார்.

பிரச்சாரத்திற்கு ஆதரவளித்த மருத்துவர்களில் குழந்தைகள் மருத்துவ வல்லுநர் டாக்டர் மூசா நோர்டின் மற்றும் புத்ராஜெயா மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை வல்லுநர் (nephrologist) டாக்டர் ரஃபிடா அப்துல்லா ஆகியோரும் அடங்குவர்.