அசைபட வழக்கு : கேலிச்சித்திர ஓவியர் அமீன் லண்டக், ஃப்ரீடம்ஃபில்ம்ஃபெஸ்ட்  ஏற்பாட்டாளரிடம் போலீஸ் விசாரணை

தனது இரண்டு நண்பர்களுடன், போலீஸ் காவலில் இருந்தபோது சித்திரவதைச் செய்யப்பட்டதாகக் கூறிய ஓர் இளையரின் சாட்சியத்தின் அடிப்படையில், நான்கு நிமிட அசைபடம் (அனிமேஷன்) ஒன்றை ஒளிபரப்பியது தொடர்பாக இருவரைப் போலீசார் விசாரணை செய்கின்றனர்.

ஃப்ரீடம் ஃபிலிம் நெட்வொர்க் (எஃப்.எஃப்.என்.) [Freedom Film Network (FFN)]  – வருடாந்திர மனித உரிமை ஆவணப்படத் திரைப்பட விழாவின் ஏற்பாட்டாளரான, ஃப்ரீடம்ஃபில்ம்ஃபெஸ்ட் (FreedomFilmFest), ஜூன் 12-ஆம் தேதி, ‘சில்லி பவுடர் & தின்னர்’ என்ற அசைபடத்தின் முதல் காட்சியை ஒளிபரப்பியது.

அன்னா ஹார்

இன்று பிற்பகல் 2.30 மணியளவில், அதன் நிறுவனர் அன்னா ஹார் மற்றும் கேலிச்சித்திர ஓவியர் அமின் லண்டக் ஆகியோர் புக்கிட் அமானுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டதாக எஃப்.எஃப்.என். தெரிவித்துள்ளது.

தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டப் பிரிவு 233 மற்றும் தண்டனைச் சட்டத்தின் 500 மற்றும் 505B பிரிவுகளின் கீழ், ஹார் மற்றும் அமீன் இருவரும் விசாரிக்கப்படுகிறார்கள்.

“காவல்துறையினரின் இறப்பு, சித்திரவதை, அதிகார அத்துமீறல் மற்றும் தவறான நடத்தை குறித்து கடுமையான கவலைகளை எழுப்பும் கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்களை விசாரிக்க காவல்துறை தேர்வு செய்வது கவலை அளிக்கிறது.

“இது வன்முறை மற்றும் தீங்குகளைச் சமாளிக்கும் நடவடிக்கைகளுக்கு முரணானது, குறிப்பாக கடந்த சில மாதங்களில்,” என்று எஃப்.எஃப்.என். நேற்று இரவு கூறியது.

கேலிச்சித்திர ஓவியர் அமின் லண்டக்

“இந்த அவசரச் செய்தியைத் திறமையாகக் கையாளுவதை விட, தகவலை முன்வைப்பவர்களுக்கு எதிராக செயல்பட அதிகாரிகள் தேர்வு செய்வது ஏன்?

“இந்த விசாரணையைக் கலைஞர்கள் மற்றும் கதைசொல்லிகள் உட்பட, மனித உரிமை பாதுகாவலர்களுக்கு எதிரான மிரட்டலாகவும், துன்புறுத்தலின் ஒரு வடிவமாகவும் நாங்கள் பார்க்கிறோம்,” என்று அக்குழு கூறியது.

ஹார் மற்றும் அமினுக்கு ஆதரவாக இருக்குமென எஃப்.எஃப்.என். உறுதியளித்தது.

சுவாராம் வெளியிட்ட ‘சில்லி பவுடர் அண்ட் தின்னர்’ அசைபடம், 16 வயது இளைஞனின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது, அவர் மேலும் இருவருடன் போலீசாரால் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டார்.

அந்த அசைபட படைப்பில், அவர்களின் கைகள் கட்டப்பட்டு, மரத்தாலான ஒரு பொருள் மற்றும் இரப்பர் குழாய்கள் போன்றவற்றால் தாக்கப்படுவதாகக் காட்டப்படுகிறது, முன்னதாக அவர்களின் உடல்களில் மிளகாய் தூளும் மெல்லிய ஒருவகை திரவமும் பூசப்படுகிறது.

இவ்வாண்டு ஏப்ரல் நடுப்பகுதியிலிருந்து ஜூன் வரையில், போலிஸ் காவலில் குறைந்தது நான்கு பேர் இறந்ததைத் தொடர்ந்து அந்த அசைபடம் உருவாக்கப்பட்டது.