ஜெராண்துட் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர், அஹ்மத் நஸ்லான் இட்ரிஸ், எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிமைப் பிரதமராக ஆதரிக்கும் வாக்குமூலத்தில் (எஸ்டி) கையெழுத்திட்டதை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
டாக்டர் மகாதீர் மொஹமட் தலைமையிலான முந்தைய பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகம் தோல்வியுற்றதாலும், முஹைதீன் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி அரசாங்கம் மக்களுக்கு உதவுவதில் இன்னும் வெற்றிபெறவில்லை என்பதாலும், புதிய அரசாங்கத்தை அமைக்கத் தயாராக இருப்பதாக அஹ்மத் நஸ்லான் கூறியதாக மிங்குவான் மலேசியா மேற்கோளிட்டுள்ளது.
“எனவே, அன்வரைப் பிரதமராக முன்மொழிந்து ஒரு யோசனை வந்தபோது, நான் ஒப்புக்கொண்டேன்.
“நாம் முயற்சிக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன, நாம் பி.எச்.-இன் கீழ் 22 மாதங்கள், தேசியக் கூட்டணியுடன் பத்து மாதங்கள் இருந்து, அவர்களின் நிர்வாகத்தை உணர்ந்துள்ளோம், புதிய அரசாங்கத்தின் நிர்வாகத்தையும் நாம் உணர்ந்து பார்க்கலாமே, ஒருவேளை புதிய அரசாங்கத்திற்குப் புதிய தோற்றம் இருக்கும்,” என்று அவர் கூறினார்.
இருப்பினும், அன்வருக்கு வேறு எத்தனை அம்னோ எம்.பி.க்கள் தங்கள் ஆதரவை வழங்கினார்கள் என்பதை அஹ்மத் நஸ்லான் வெளியிடவில்லை.
“பரிசீலனைகள் செய்து, தேர்ந்தெடுக்கும்படி கேட்கப்பட்டபோது, அது தவறில்லை என எனக்கு தோன்றியது, ஏனென்றால் இன்றைய அரசாங்கம் எனது கருத்துபடி வெற்றிபெறவில்லை, எனவே புதிய அரசாங்கத்திற்கு நாம் ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
அஹ்மத் நஸ்லான் முன்பு, முன்னாள் அம்னோ உதவித் தலைவர் ஹிஷாமுடின் ஹுசைனை ஆதரித்தார், ஆனால் பின்னர் அன்வாரை ஆதரித்தார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் முஹைடின் யாசின் தலைமையிலான அரசாங்கத்தின் சரிவுக்கு வழிவகுக்கும் வகையில், அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி தேசியக் கூட்டணியில் இருந்து அம்னோவை நீக்க முயற்சிக்கிறார் என்று வதந்திகள் உள்ளன.
ஹிஷாமுடின் ஹுசைன் மற்றும் அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப் உள்ளிட்ட அம்னோ எம்.பி.க்கள் குழு இந்த முயற்சியைத் தடுக்க முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.
இது அம்னோவின் உட்கட்சி போராட்டத்திற்கான ‘அரங்கை’ திறப்பதோடு, தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் தலைவிதியையும் தீர்மானிக்கும்.