பொது மருத்துவமனைகளில், கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது அதிகமாக இருப்பதால், மோசமாக நோயுற்ற பல கோவிட் -19 நோயாளிகள், மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) படுக்கை பெற காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
இருந்தாலும், மருத்துவமனைகளில் படுக்கை திறனை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நூர் ஹிஷாம் கூறினார்.
அவரைப் பொறுத்தவரை, ஐ.சி.யு.வில், குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கில், கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை.
தற்போது, 1,224 கோவிட் -19 நோயாளிகள் ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 567 நோயாளிகள் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ளனர்.
“கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள மருத்துவமனைகளின் அவசரப் பிரிவுகளில், நெரிசல் காரணமாகவும், வார்டு மற்றும் ஐ.சி.யுவில் படுக்கைகள் இல்லாததாலும், மோசமான நிலையில் உள்ள நோயாளிகள் பலர் இன்னும் வார்டில் அனுமதிக்க முடியாத நிலையில் காத்திருக்கின்றனர் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
“இதேபோல், உயிர்வளி உதவி தேவைப்படும் ஏராளமான கோவிட் -19, வகை 3 மற்றும் வகை 4 நோயாளிகள், தாமான் பெர்தானியான் அக்ரோ மலேசியா செர்டாங்கில் (மேப்ஸ்) உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் குறை இடர் சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற வேண்டியுள்ளது,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இச்சிக்கலை சமாளிக்க, கோலாலம்பூர் மருத்துவமனை கோவிட்-19 அல்லாத நோயாளிகளைத் தனியார் மருத்துவமனைகளுக்குச் சிபாரிசு செய்யவுள்ளதாக நூர் ஹிஷாம் கூறினார்.
கோவிட் -19 வகை 4 மற்றும் 5 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் கோலாலம்பூர் மருத்துவமனையின் திறனை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும்.
யு.கே.எம். குழந்தை நிபுணத்துவ மருத்துவமனை, செலாயாங் மருத்துவமனை மற்றும் கிள்ளான் தெங்கு அம்புவான் இரஹிமா மருத்துவமனை ஆகியவை அந்த இரு பிரிவுகள் கோவிட் -19 நோயாளிகளுக்கும் சிகிச்சையளிக்கும் திறனை அதிகரிப்பது போன்றவை மற்ற நடவடிக்கைகளில் அடங்கும் என்று நூர் ஹிஷாம் கூறினார்.
அடுத்து, கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள கோவிட் -19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதில், முகான்மை வசதியாக மாறியுள்ள சுங்கை பூலோ மருத்துவமனையைப் போலவே, அம்பாங் மருத்துவமனையும் கோவிட் -19 சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும். அந்த மாற்றம் ஜூன் 30 அன்று நடந்தது.
மொத்தத்தில், கோவிட் -19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க, 17 அரசு மருத்துவமனைகள் சேவையில் இருக்கும் என்று நூர் ஹிஷாம் கூறினார்.
இதற்கிடையில், பொது மருத்துவமனைகளில், குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கின் நிலைமை மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனைகளிடம் சுகாதார அமைச்சு உதவி கோரியுள்ளதை மலேசியத் தனியார் மருத்துவமனைகள் சங்கம் (ஏ.பி.எச்.எம்.) உறுதிப்படுத்தியது.
ஏ.பி.எச்.எம். தலைவர், டாக்டர் குல்ஜித் சிங் அதன் உறுப்பினர்கள் உதவி வழங்க தயாராக இருக்கிறார்கள் என்றார்.
“அவர்களின் வேண்டுகோளுக்குப் பதிலளிக்கும் விதமாக, பெரும்பாலான தனியார் மருத்துவமனை குழுக்கள் மற்றும் சில தனியார் மருத்துவமனைகள், கிள்ளான் பள்ளத்தாக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது மருத்துவமனைகளில் கோவிட் -19 நோயாளிகளை நிர்வகிக்க உதவும் வகையில் பயிற்சி பெற்ற தாதியர்களை (முதல் கட்டமாக) அரசுக்கு வழங்க ஒப்புக் கொண்டுள்ளன.
“நாங்கள் அவர்களுக்கு மற்ற மருத்துவ அதிகாரிகளை வழங்கியும் உதவுவோம்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, தனியார் மருத்துவமனைகள் கோவிட் -19 தொற்றுடன் போராட, சுவாசக் கருவிகள் வழங்குதல், கோவிட் -19 சோதனைகளை நடத்துதல், கோவிட் -19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்தல் போன்றவற்றோடு, தடுப்பூசி முயற்சிகளுக்கும் உதவுகிறது என குல்ஜித் சொன்னார்.
இதுபோன்ற நடவடிக்கைகளில் தனியார் மருத்துவமனைகள் ஈடுபடுவதால், அது மனிதவளத் தட்டுபாடுகளை எதிர்கொண்டுள்ளது என்றார்.
“சிரமங்களைப் பொருட்படுத்தாமல், தற்போதுள்ள நிலைமையை நிர்வகிப்பதில் தனியார் மருத்துவமனைகள் அரசாங்கத்தை ஆதரிக்க தயாராக உள்ளன.
“சிறந்த சிகிச்சையைப் பெறுவதில், நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில் சமமாக நடத்தப்படுகிறார்கள் என்பதும், அவசரகாலச் சட்டத்தில் உள்ளது போலவே, இதற்கான செலவுகளை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் என நாங்கள் நம்புகிறோம்,” என்று குல்ஜித் மேலும் கூறினார்.