ஜூலை 26-ஆம் தேதி, மக்களவை மீண்டும் கூடும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
14-ஆம் நாடாளுமன்றத்தின் மூன்றாம் காலச் சிறப்புக் கூட்டம் ஜூலை 26 முதல் 29 மற்றும் ஆகஸ்ட் 2-ஆம் தேதியென 5 நாட்களுக்கு மக்களவை கூட்டமும், ஆகஸ்ட் 3 முதல் 5 வரையில் 3 நாட்களுக்கு மேலவை கூட்டமும் நடைபெறும் என்று பேரரசருக்குத் தெரிவிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டதாக பிரதமர் அலுவலகம் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“இந்த கூட்டத்தின் நோக்கம், தேசிய மீட்புத் திட்டம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிப்பதும், நாடாளுமன்றக் கூட்டங்களை நேரடி மற்றும் நேரலை (ஹைபிரிட்) முறையில் நடத்த ஏதுவாக அனைத்து சட்டங்களையும் ஒழுங்குமுறைகளையும் திருத்துவதும் ஆகும்.
“கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 150, பிரிவு (3)-இன் படி, மாட்சிமை தங்கியப் பேரரசர் அறிவித்த அனைத்து அவசரப் பிரகடனங்களும் கட்டளைகளும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் முன் வைக்கப்படும் (நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் முன் வைக்கப்படும்),” என்று அந்த அறிக்கை கூறியது.
இந்த மாநாட்டிற்குத், தேசியப் பாதுகாப்பு மன்றமும் சுகாதார அமைச்சும் வகுத்துள்ள விதிகள் பொருந்தும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த முடிவு, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடத்த அம்னோ புத்ராஜெயாவுக்கு வழங்கிய 14 நாட்களின் முடிவோடு ஒத்துப்போகிறது.
“ஹைபிரிட்” நாடாளுமன்ற முறையைப் படித்து முன்மொழியும் குழு – நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாகவும் நேரலையிலும் கலந்துகொள்ளும் குழு – இன்று கூடும் எனத் தெரிகிறது.
பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து நாட்களுக்குள் பின்வருவனவற்றில் விவாதித்து வாக்களிக்க வேண்டும் :
- அவசரநிலை பிரகடனம்
- அவசர (அத்தியாவசிய அதிகாரங்கள்) கட்டளை 2021
- அவசரநிலை (தொற்று நோய்களைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துதல்) (திருத்தம்) கட்டளை 2021
- அவசரக் கட்டளை (வீட்டுவசதி, தங்குமிடம் மற்றும் பணியாளர் வசதிகளின் குறைந்தபட்ச தரநிலைகள்) (திருத்தம்) 2021
- அவசரக் (அத்தியாவசிய அதிகாரங்கள்) கட்டளை (எண் 2) 2021
- அவசர (அத்தியாவசிய அதிகாரங்கள்) (திருத்தம்) கட்டளை 2021
- அவசரக் கட்டளை (குற்றவாளிகளின் கட்டாய வருகை) (திருத்தம்) 2021
- அவசரக் (தேசிய அறக்கட்டளை நிதி) (திருத்தம்) கட்டளை 2021
கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 150 (3)-இன் படி, நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தால் ஒரு பிரகடனம் அல்லது தீர்மானத்தை இரத்து செய்யலாம்.
தீர்ப்பு இரத்து செய்யப்படாவிட்டால், கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 150 (7)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அவசரநிலை முடிவடைந்த நாளிலிருந்து ஆறு மாதங்களுக்கு இந்த உத்தரவு அமலில் இருக்கும்.
மிக முக்கியமாக, அடுத்த மக்களவை அமர்வு பிரதமர் முஹைதீன் யாசினுக்கு – இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் – மக்களவையில் பெரும்பான்மையினரின் ஆதரவு உள்ளதா என்பதையும் சோதிக்கும்.