ஜூலை 7-ல், மீட்பு திட்டத்தின் 2-ஆம் கட்டத்தில் பினாங்கு

ஜூலை 7 முதல், தேசியப் புனர்வாழ்வு திட்டத்தின் (பிபிஎன்) இரண்டாம் கட்டத்திற்குப் பினாங்கு நகரும் என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார்.

இன்று, பெர்லிஸ், கிளந்தான், திரெங்கானு, பஹாங் மற்றும் பேராக் ஆகிய மாநிலங்கள் இரண்டாம் கட்டத்திற்குள் நுழைந்ததைப் பின்பற்றி, அடுத்து பினாங்கும் செல்கிறது.

கட்ட மாற்றத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட மூன்று அளவுகோல்களையும் பினாங்கு அடைந்ததைத் தொடர்ந்து, தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் சிறப்பு அமர்வு மூலம் இந்த மாற்றம் முடிவு செய்யப்பட்டது என்று இஸ்மாயில் கூறினார்.

அவர் குறிப்பிட்ட அந்த மூன்று அளவுகோல்கள் :-

  • 100,000 மக்கள்தொகைக்கு, 9.5 என்ற ஏழு நாட்களுக்கு சராசரி தினசரி நோய்த்தொற்று நேர்வுகள் (வாசல் மதிப்பு : 100,000 மக்கள்தொகைக்கு 12.2 நேர்வுகள்).
  • தீவிரச் சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) படுக்கைகளின் பயன்பாட்டு விகிதம் மிதமான நிலையை அடைதல்.
  • பெரியவர்களுக்கு இரண்டு மருந்தளவுகள் தடுப்பூசி வீதம், 10.1 விழுக்காடு (வாசல் மதிப்பு: 10 சதவீதம்).

“இந்த மூன்று குறிகாட்டிகள் மற்றும் சுகாதார அமைச்சு உள்ளிட்ட நிறுவனங்களின் விரிவான மதிப்பீட்டின் அடிப்படையில், பினாங்குக்கான 2-ம் கட்ட மாற்றத்தை, ஜூலை 7 முதல் அமல்படுத்த அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.