கடந்த மாத இறுதியில் இருந்து தொடர்ந்து, சிலாங்கூரில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், கோவிட் -19 நேர்வுகளில் குறிப்பாக, மூன்று மற்றும் அதற்கு மேற்பட்ட வகை சார்ந்த நோயாளிகளை உள்ளடக்கிய அதிக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, எனச் சிலாங்கூர் சுகாதார இயக்குநர் டாக்டர் ஷா’ரி ங்காடிமான் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, மலேசிய ஆயுதப்படையின் (ஏதிஎம்) கள மருத்துவமனைகளைச் செயல்படுத்துவதன் மூலமும், சிலாங்கூர் மாநிலச் சுகாதாரத் துறையில் (ஜே.கே.என்.எஸ்.) மருத்துவ உபகரணங்களை அவசரமாக வழங்குவதன் மூலமும் தனது தரப்பு படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருவதாக டாக்டர் ஷாரி கூறினார்.
“மருத்துவ அதிகாரிகள், தாதியர் மற்றும் உதவி மருத்துவ அதிகாரிகள் உட்பட, கோவிட் -19 நிலைமைக்கு உதவுவதற்காக, கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து வெளி சுகாதார ஊழியர்களை அணிதிரட்டுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ளது,” என்று அவர் நேற்று இரவு ஜே.கே.என்.எஸ்.-இன் முகநூலில் தெரிவித்தார்.
கிள்ளான் தெங்கு அம்புவான் இரஹிமா மருத்துவமனை (எச்.தி.ஏ.ஆர்) மற்றும் ஷா ஆலம் மருத்துவமனையில், அவசரச் சிகிச்சை பிரிவின் புகைப்படம் பரவலானதைத் தொடர்ந்து, சிலாங்கூரில் உள்ள மருத்துவமனைகளின் தற்போதைய நிலையை அவர் விளக்கினார்.
இதற்கிடையில், ஷா ஆலம் மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளின் சேர்க்கை கடுமையாக அதிகரித்திருப்பதற்குக் காரணம், இப்போது கோவிட்-19 அல்லாத நோயாளிகளுக்கு முக்கிய சிறப்பு மருத்துவமனையாக அது உள்ளதாலேயே என்றார். பெட்டாலிங் மாவட்டத்தைச் சார்ந்த கோவிட்-19 அல்லாதவர்களுக்கு அவசரச் சிகிச்சைகளை வழங்குவதால், அம்மருத்துவமனை அளவுக்கு அதிகமான நோயாளிகளின் வருகையைக் கண்டுள்ளது என்று டாக்டர் ஷாரி விளக்கினார்.
“எச்.தி.ஏ.ஆர். கிள்ளானைப் பொறுத்தவரை, பெரும்பாலான நோயாளிகள் வார்டில் படுக்கைக்காகக் காத்திருக்கும்போது, அவசரச் சிகிச்சைப் பிரிவில் முதலில் சிகிச்சை பெறுகின்றனர். எனவே, எச்.தி.ஏ.ஆர். அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே சிறிது நேரம் காத்திருக்க படுக்கைகளை ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது.
“எச்.டி.ஏ.ஆர். மற்றும் ஷா ஆலம் மருத்துவமனை தரப்பினர், அந்தந்த மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.
சிலாங்கூரில் கோவிட் -19 நோய்த்தொற்றின் தற்போதைய நிலைமை அதிகரித்து வருவதால், எச்.டி.ஏ.ஆர்.-இல், மற்றொரு கள மருத்துவமனை (ஏதிஎம்) நிறுவப்படும் என்று, துணைப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் நேற்று ஓர் அறிக்கையில் அறிவித்தார்.
- பெர்னாமா