நேற்றைய நிலவரப்படி, 3,190,789 பேர் அல்லது 10 விழுக்காடு மலேசியர்கள் கோவிட் -19 தடுப்பூசி பெற்றுள்ளதாக தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டம் (பிக்) ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார்.
தேசிய மீட்புத் திட்டத்தில் (பிபிஎன்) நடமாட்டக் கட்டுப்பாட்டின் முதல் கட்டத்திலிருந்து மாறுவதற்கான முதல் வாசல் மதிப்பை மலேசியா சந்தித்திருப்பதை இது சுட்டிக்காட்டுவதாக அவர் கூறினார்.
“பெரியவர்களில், 30 விழுக்காட்டினர் முதல் அளவையும், 13.6 விழுக்காட்டினர் இரண்டு மருந்தளவு கோவிட் -19 தடுப்பூசியை முடித்துள்ளனர்.
“இந்த மாதத் தொடக்கத்தில், ஜூலை மாதத்தில் 300,000 ஊசிகள் போடுவதாக அறிவித்திருந்தோம், இருப்பினும் கடந்த மூன்று நாட்களில் 1 மில்லியன் மருந்தளவுகள் வெற்றிகரமாக வழங்கப்பட்டன,” என்று அவர் தெரிவித்தார்.
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சருமான கைய்ரி, கடந்த சில மாதங்களாக சிறிய அளவிலான தடுப்பூசி கொடுக்கப்பட்டதற்குக் காரணம் தடுப்பூசி வழங்கல் மற்றும் தடுப்பூசி விநியோகத்தில் உலகளாவிய ஏற்றத்தாழ்வுவே என்றார்.
ஜூலை 4-ஆம் தேதி நிலவரப்படி, பெறப்பட்ட 67 மில்லியன் தடுப்பூசிகளில், 12.6 மில்லியன் அஸ்ட்ராஸெனெகா, ஃபைசர் மற்றும் சினோவாக் தடுப்பூசிகளை மலேசியா பெற்றுள்ளது என்றார் கைய்ரி.
ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பதிவாகியுள்ள தரவுகளைப் பற்றி குறிப்பிடுகையில், 100 பேரில் (மக்கள் தொகையில் 30 முதல் 40 விழுக்காடு வரை), முழுமையான தடுப்பூசி பெற்ற 30 முதல் 40 பேரை எட்டும்போது, புதிய வழக்குகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை குறையும் என்று கைய்ரி கூறினார்.
ஆகஸ்ட் மாத இறுதிக்குள், மலேசிய மக்கள் தொகையில் 30 முதல் 40 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போடப்பட்டு, உலகத் தரவுகளின் அடிப்படையில் இறப்பு வீழ்ச்சியைக் காணும் என்று அவர் கூறினார்.
- பெர்னாமா