வெளிநோயாளிகள் பகுதி, பயிற்சி மருத்துவர்களின் வீடு வார்டுகளாகப் புதுப்பிக்கப்பட்டன

பல அரசு மருத்துவமனைகள், பயிற்சி மருத்துவர்களின் வீடுகளையும் வெளிநோயாளிகள் பகுதிகளையும், படுக்கைகளுக்கு இடமளிக்கும் வகையில் வார்டுகளாகப் புதுப்பித்துள்ளன.

கோவிட் -19 நேர்வுகள் பெருமளவில் அதிகரித்து வருவதால், பொது சுகாதார அமைப்பில் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், கிள்ளான் தெங்கு அம்புவான் இரஹிமா மருத்துவமனையும் இதில் அடங்கும்.

“ஏ.சி.சி. (பகல்நேரச் சிகிச்சை மையம்), எச்.ஓ. (பயிற்சி மருத்துவர்களுக்கான அரசு குடியிருப்பு) ஆகியவற்றின் இருப்பிடத்தையும் நாங்கள் மாற்றி அமைத்து, திடீரென அதிகரிக்கும் நேர்வுகளைச் சமாளிக்க அதிகப் படுக்கைகளை ஏற்படுத்தியுள்ளோம்,” என்று அவர் மலாயாகினியிடம் கூறினார்.

கோவிட்-19 அல்லாத நோயாளிகளைத் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்புவதோடு, கூடுதலாக இது செய்யப்பட்டுள்ளது.

நோயாளிகளின் வருகை அதிகரித்ததால், தெங்கு அம்புவான் இரஹிமா மருத்துவமனை முன்பு மருத்துவமனைக்கு வெளியே தற்காலிகப் படுக்கைகளை அமைத்திருந்தது.

அதன் பின்னர் படுக்கை கட்டிடத்திற்குள் நகர்த்தப்பட்டது.

கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள கோவிட் -19 நோயாளிகள், பிற மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவார்களா என்ற கேள்விக்கு நூர் ஹிஷாம் பதிலளித்தார்.

அந்தந்த மருத்துவமனைகளிலேயே நடவடிக்கை எடுக்கப்படுவதால், இதில் “உண்மை இல்லை” என்று அவர் கூறினார்.

ஜூலை 8-ம் தேதி, மலேசிய ஆயுதப்படைகள் (ஏதிஎம்) தற்போதுள்ள திறனுக்கு வெளியே செயல்படுவதில் உள்ள சிக்கலை சமாளிக்க வங்சா மாஜுவில் உள்ள துவாங்கு மிஸான் இராணுவ மருத்துவமனையின் வாகன நிறுத்துமிடத்தில் அவசர வார்டு அமைக்க உதவியது.

கோலாலம்பூரில் மற்றும் பெரும்பாலான சிலாங்கூர் மாவட்டங்களில் பி.கே.பி.டி. அமலில் இருந்தபோதும், தினசரி எண்ணிக்கைகள் அதிகரித்து வருகின்றன.

சிலாங்கூரில் 4,000-க்கும் மேற்பட்ட புதிய தொற்றுகள் நேற்று பதிவாகின.

அப்படியிருந்தும், வணிக வளாகங்களை மீண்டும் திறக்க அரசாங்கம் அனுமதிக்கத் தொடங்கியுள்ளது.