சைஃபுட்டின் : ‘அரசியல் செய்ய வேண்டாம்’ என்று பிரதமரிடமும் பிஎன்’னிடமும் சொல்லவும்

துணைப் பிரதமர் (திபிஎம்) இஸ்மாயில் சப்ரி யாகோப், பிரதமர் முஹைதீன் யாசினிடமும் தேசியக் கூட்டணி (பிஎன்) உறுப்புக் கட்சிகளின் தலைவர்களிடமும், அரசியல் செய்வதை நிறுத்த அறிவுறுத்த வேண்டும் என்று பி.கே.ஆர். தலைமைச் செயலாளர் சைஃபுட்டின் நாசுதியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

ஜனவரி மாதம் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டதிலிருந்து, கோவிட் -19 தொற்றைக் கையாள்வதற்கும் பொருளாதாரத்தைப் புதுப்பிப்பதற்கும் பிஎன் அரசாங்கத்திற்கு முழு அதிகாரம் இருப்பதாக சைஃபுட்டின் கூறினார்.

அப்படியிருந்தும், அரசாங்கம் எடுத்த சில நடவடிக்கைகளுக்கும் கோவிட் -19 தொற்றைத் தடுப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் கூறினார்.

“திபிஎம் அரசியல் செய்ய வேண்டாம், கோவிட் தொற்றை எதிர்த்து போராடுவதில் கவனம் செலுத்துங்கள் என்று அறிவுறுத்தினார். (ஆனால்) அம்னோ (முஹைதீனுக்கான)  ஆதரவைத் திரும்பப் பெற்றதற்கும் கோவிட்டுடன் போராடுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

“இஸ்மாயிலைத் துணைப் பிரதமராக முஹைதீன் நியமித்ததற்கும், கோவிட்டை எதிர்த்து போராடுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மக்களுக்கு ஒரு துளிகூட நன்மை இதில் இல்லை. இது பிரதமர் தன்னைக் காப்பாற்றுவதற்கான ஒரு நடவடிக்கை, மக்களைக் காப்பாற்றுவதற்காக அல்ல.

“திபிஎம்-க்கு எனது செய்தி என்னவென்றால் : உங்கள் அறிவுறுத்தலைப் பிரதமருக்கும், பிஎன் சகாக்களுக்கும் அனுப்புங்கள்,” என்று கூலிம் பண்டார் பாரு எம்.பி.யான சைஃபுட்டின் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜூலை 8-ம் தேதி, அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, கட்சி முஹைதீனுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவதாக அறிவித்து, உடனடியாகப் பதவி விலகுமாறு கோரினார்.

ஆனால், அம்னோவின் 38 எம்.பி.க்களில் பெரும்பாலோர், பெர்சத்து தலைவரான முஹைதீனை நீக்குவதற்கு உடன்படவில்லை.

நாடாளுமன்றம் இடைநிறுத்தப்பட்டு, அரை வருடத்திற்கும் மேலாகப் பரந்த அதிகாரங்களைக் கொண்டிருந்தும், கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் பிஎன் அரசாங்கம் வெற்றி பெறவில்லை என்று சைஃபுட்டின் கூறினார்.

“அமைச்சரவையும் தேசியப் பாதுகாப்பு மன்றமும் எதையும் செய்ய முடியும். மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்,” என்று அவர் விளக்கினார்.

இருப்பினும், கோவிட் -19 தொற்றின் தினசரி நேர்மறை நேர்வுகளும் இறப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்று அவர் கூறினார்.

“பொருளாதாரம் தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது. மக்கள் வேலை இழக்கிறார்கள், வருமானத்தை இழக்கிறார்கள். பள்ளி குழந்தைகள் இயங்கலை கற்றல் கற்பித்தலுடன் (பிடிபிஆர்) திண்டாடி கொண்டுள்ளனர். தற்கொலை வழக்குகள் அதிகரித்து வருகின்றன,” என்று அவர் மேலும் கூறினார்.

நேற்று, இஸ்மாயில் அனைத்து தரப்பினரையும், குறிப்பாக அரசியல்வாதிகளை, அரசியல் செய்வதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார், அதற்குப் பதிலாக கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்துங்கள் என்றார்.