மலாயா மாணவர் சங்கம் (கே.எம்.யூ.எம்) மாணவர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும், தற்போது இயங்கலை வகுப்புகளில் தீவிரமாக ஈடுபடும் மாணவர்களின் மனநலப் பிரச்சினைகளைக் கருத்தில் எடுத்துகொள்ளவும் பல்கலைக்கழகங்களை வலியுறுத்தியது.
உள்ளூர் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இறந்ததைத் தொடர்ந்து, இந்த வலியுறுத்தல் வந்துள்ளது. இடுபணிகள், சோதனைகள் மற்றும் தேர்வுகள் என அதிகப் பணிச்சுமையால், அம்மாணவர்கள் மன அழுத்தத்தை எதிர்கொண்டதாக நம்பப்படுகிறது.
“கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நடந்து வரும் இயங்கலை கற்றல் மாணவர்களின் மன ஆரோக்கியத்தில் மிகவும் கவலையானத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
“இந்தப் பிரச்சினையை எழுப்பிய மாணவர்களின் குரலைச் சம்பந்தப்பட்ட தரப்பினர் மறுக்கக்கூடாது என்பதே கே.எம்.யூ.எம்.-இன் கருத்தாகும். தங்கள் உயிரை உள்ளடக்கியப் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்கும் உரிமை மாணவர்களுக்கு உள்ளது,” என்று அது நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
இடுபணிகள், சோதனைகள், தேர்வுகள் மற்றும் கல்வி விவகாரங்கள் குறித்து முடிவெடுப்பதில் பல்கலைக்கழகங்களுக்குச் சுதந்திரம் இருந்தாலும், அதிக அதிகாரம் கொண்ட தரப்பான உயர்க்கல்வி அமைச்சு இந்தப் பிரச்சினையில் தலையிட வேண்டும் என்று கே.எம்.யூ.எம். கூறியது.
“இந்தப் பிரச்சினையை அமைதிப்படுத்துவது என்பது மாணவர்களின் உயிரைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என அர்த்தமாகும்,” என்று அவர்கள் கூறினர்.
இதற்கிடையில், மாணவர்களிடையே மன ஆரோக்கியத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று உயர்க்கல்வி அமைச்சையும் உயர்க்கல்வி நிறுவனங்களையும் கெராக்கான் மஹாசிஸ்வா டெமோக்ராடிக் (ஜிஎம்டி) மற்றும் இகாத்தான் டெமோக்ராடிக் கட்சியும் (மூடா) வலியுறுத்தின.
முக்கியமற்றப் பாடங்களை நீக்குக
மாணவர்களின் பணிச்சுமை குறைக்கப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு நான்கு வாரங்களுக்குப் பிறகு வழங்கப்படும் ஒரு வார கால இடைவெளியைத் தவிர, கடைசி நிமிடத்தில் பணிகள் அல்லது சோதனைகள் எதுவும் வழங்கப்படக்கூடாது என்றும் அவர்கள் பரிந்துரைத்தனர்.
“அந்த வாரத்தில் சோதனைகள், வினாடி வினாக்கள் அல்லது பணி சமர்ப்பிக்கும் காலக்கெடுக்கள் எதுவும் இருக்கக்கூடாது,” என்று ஜிஎம்டி குழுவின் தகவல் பிரிவுத் தலைவர் அஃபான் நஸ்ருதீனும் மூடா’வின் நிர்வாக மற்றும் அணிதிரட்டல் இயக்குநர் டாக்டர் மதன் நாயரும் கூட்டு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
கூடுதலாக, மாணவர்கள் அதிக மன அழுத்தமின்றி இடுபணிகளை முடிக்க, போதுமான நேரம் கிடைக்கும் வகையில், சமர்ப்பிக்கும் காலக்கெடுவை நீட்டிக்கவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
முக்கியமற்ற பாடங்கள் நீக்கப்பட வேண்டும். இதன்வழி, பட்டப்படிப்பு முடிந்தபின் மாணவர்களைச் சந்தைப்படுத்துதலில் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கியமான பாடங்களில் மட்டும் மாணவர்கள் கவனம் செலுத்த முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
“நம் நாட்டில் பெருகிவரும் சிக்கலான தொற்றுநோயைக் கருத்தில் கொள்ளாமல், மாணவர்களைச் சுற்றி எதுவும் நடக்காதது போல், தொடர்ந்து கற்றலை எதிர்பார்க்கக்கூடாது,” என்றும் அவர்கள் கூறினர்.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை மாலை, கெடா, சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனையில், பொது பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத் துறை சார்ந்த ஒரு மாணவர் இறந்துவிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
22 வயதான அம்மாணவர், ஒரு நண்பருடன் வசித்து வந்த வீட்டில், கடுமையான தலைவலியுடன், வாந்தியெடுத்து, மயங்கி விழுந்ததாகக் கூறபடுகிறது.
யுஐதிஎம் ஜெங்கா-ஐ சேர்ந்த சிவில் இன்ஜினியரிங் டிப்ளோமா மாணவர் ஒருவரும், கடந்த சனிக்கிழமையன்று, திரெங்கானு சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனையில் இறந்தார்.