உடல்கள் வைக்க கொள்கலன் – கிள்ளான் எச்.தி.ஏ.ஆர். ஏற்றுக்கொண்டது

உடல்களை வைக்க, ம.இ.கா. வழங்கிய கொள்கலன் நன்கொடையை, கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை (எச்.தி.ஏ.ஆர்.) இறுதியாக ஏற்றுகொண்டது.

பெருகிவரும் கோவிட் -19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்கும், சடலங்களை வைப்பதற்குமான இடப் பற்றாக்குறையை மருத்துவமனை எதிர்கொள்கிறது என்ற வெளிப்பாடுகளைத் தொடர்ந்து இது நடந்துள்ளது.

எச்.தி.ஏ.ஆர். தனது முகநூல் பக்கத்தில், தேசிய முன்னணி உறுப்புக் கட்சியின் அந்தப் பங்களிப்பை ஏற்றுக்கொண்டதை இன்று ஒப்புக் கொண்டுள்ளது.

“சிலாங்கூர் மாநிலத்தில், குறிப்பாக, கிள்ளான் மாவட்டத்தில், கோவிட் -19 தொற்றுநோயை நிர்வகிப்பதில் எச்.தி.ஏ.ஆர்.-க்கு உடல்கள் வைக்க கொள்கலன்களை நன்கொடையாக அளித்த ம.இ.கா.வுக்கு நன்றி தெரிவிக்க எச்.தி.ஏ.ஆர். விரும்புகிறது,” என்று அவர் கூறினார்.

ம.இ.கா.வின் பங்களிப்பு ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்டது.

நேற்று, மொஹமட் அஸார் ஒஸ்மான் என்று அழைக்கப்படும் ஒருவர் ‘டிக்டோக்’ பதிவு ஒன்றில், எச்.தி.ஏ.ஆர். இயக்குநர், டாக்டர் சுல்கர்னாய்ன் மொஹமட் ரவி அந்தக் கொள்கலன் நன்கொடையை நிராகரித்தது வருத்தமளிப்பதாக அவர் கூறியிருந்தார்.

இந்த விஷயத்தில் ஏமாற்றமடைந்த மொஹமட் அஸார், மருத்துவமனை மறுநாள் கொள்கலனைப் பெறத் திட்டமிட்டிருந்ததே அதற்குக் காரணம் என்று கூறினார்.

“மருத்துவமனைக்குக் கொடுக்க, நாங்கள் RM35,000 செலுத்தி அந்தக் கொள்கலனை வாங்கியுள்ளோம், நாங்கள் மருத்துவமனைக்கு உதவ விரும்புகிறோம்

“ஆனால், முதலில் சரியென்று சொன்ன மருத்துவமனை இயக்குநர், 3 மணி நேரம் கழித்து மறுத்துவிட்டார், நாளை 8 கொள்கலன்கள் வரும் என்று அவர் கூறினார்,” என்று அவர் சொன்னார்.

பின்னர் அந்த வீடியோவை நீக்கிய அஸார், சுகாதார அமைச்சின் தலையீட்டைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தீர்க்கப்பட்டதாக ஒரு புதிய வீடியோவை வெளியிட்டார்.

“இறுதியாக, எங்கள் கொள்கலன்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டன. சுகாதார அமைச்சு, அதன் அமைச்சர் ஆதாம் பாபா மற்றும் மருத்துவமனை இயக்குநருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்,” என்று அவர் விளக்கினார்.

இந்த விவகாரம் தீர்க்கப்பட்டதை ஆதாம் உறுதிப்படுத்தினார்.