பாக்சைட் சுரங்கங்கள் செயல்படத் தொடங்கினால், மீண்டும் ‘பேரழிவு’ ஏற்படும்

2014 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில், பாக்சைட் சுரங்கங்களின் செயற்பாடு காரணமாக, செவ்வாய் கிரகம் போன்ற வளிமண்டலத்தை உருவாக்கி, குவாந்தான் மாநகரின் பெரும்பகுதி சிவப்பு தூசியால் சூழ்ந்திருந்தது.

பாக்சைட் சுரங்கம் விரைவில் அதன் நடவடிக்கைகளைத் தொடங்கும்போது, சுற்றுச்சூழல் பேரழிவு மீண்டும் ஏற்படக்கூடும் என்று குவாந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபுசியா சல்லே கவலை தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (ஈ.ஐ.ஏ.) தணிப்பு திட்டங்களுடன் செய்யப்பட்டுள்ள போதிலும், காகிதத்தில் இருப்பது எப்போதும் ஓர் உண்மையாகாது என்றார் அவர்.

அமலாக்கம் எப்போதுமே ஒரு பிரச்சினையாக இருக்கலாம், தோல்வியும் அடையலாம் என்று அவர் கூறினார்.

“அவர்கள் (ஈ.ஐ.ஏ.) பரிந்துரைப்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன், ஏனென்றால் நமக்கு எப்போதும் அமலாக்கத்தில் சிக்கல்கள் இருப்பதை நாம் அறிவோம். இந்த முறை சிறப்பாக இருக்கும் என்று எங்களுக்கு எப்படி தெரியும்?

“அவர்கள் மீண்டும் மீண்டும் வாக்குறுதியளித்தாலும், நாங்கள் இன்னும் பிரச்சினைகளை எதிர்கொண்டுதான் வருகிறோம்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

கடந்த கால மாசுபாடு சம்பவங்கள், பெரும்பாலும் முன்மொழியப்பட்ட திட்டத் தணிப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தவறியதால்தான் என்று ஃபுசியா கூறினார்.

“கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில், அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் (பாக்சைட் தாதுக்களை லாரிகளுக்குள்) போடுவார்கள்.

“அவர்கள் அதை நிரப்பினால், நீங்கள் லாரியின் டயர்களை (ஈ.ஐ.ஏ. பரிந்துரைத்தபடி) கழுவினாலும், அது (பாக்சைட் தாது) சாலையில் விழவேச் செய்யும்,” என்று அவர் கூறினார்.

பாக்சைட் சுரங்கம் காரணமாக, குவாந்தானின் நான்கு ஆறுகள் பாதரசத்தால் மாசுபட்டுள்ளதாக 2015-ஆம் ஆண்டு, சுற்றுச்சூழல் துறையின் அறிக்கை காட்டியதாக ஃபுசியா கூறினார், ஆனால் அவ்வறிக்கை வெளியிடப்படவில்லை.

“அவர்கள் தண்ணீரைக் (அமாங் நீர்த்தேக்கக் குளம்) கண்காணிப்பார்கள் என்று கூறுகிறார்கள், (ஆனால்) திடீரென்று கனரக உலோகங்களில் உயர்வு ஏற்பட்டால் என்ன செய்வது?

“சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, இவர்கள் பொறுப்பேற்பார்கள் என்றும், உண்மையில் பாடுபடுவார்கள் என்றும் நமக்கு எப்படி தெரியும்,” என்று அவர் கேட்டார்.

முன்மொழியப்பட்ட சுரங்கத் தளம் குவாந்தான் நகர மையத்திலிருந்து, 20 கி.மீ. வடக்கே புக்கிட் கோ’வில் உள்ளது.

நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ஏற்படும் ஆபத்து

ரியாவ் ஆற்றில் அமைந்துள்ள புக்கிட் கோ நீர் சுத்திகரிப்பு நிலையம், பரிந்துரைக்கப்பட்ட சுரங்க இடத்திற்கு அருகில் உள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுரங்கப் பகுதியிலிருந்து, கழிவுநீர் ஆற்றில் பாய்ந்தால் உள்ளூர்வாசிகள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் விளக்கினார்.

குவாந்தான் ஆற்றின் அருகே அமைந்துள்ள செமாம்பு நீர் சுத்திகரிப்பு நிலையம், கு குவாந்தானில் 700,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.

பாக்சைட் சுரங்க நடவடிக்கைகள் குவாந்தானுக்கான குடிநீர் ஆதாரங்களை மாசுபடுத்தும் என்று ஃபுசியா எச்சரித்தார்.

சுயஆர்வங்களுக்கான சச்சரவுகள்

சுரங்கத் திட்டத்தின் முக்கிய இயக்கியான, மாநில அரசின் பஹாங் மாநில மேம்பாட்டுக் கழகத்தை (பி.கே.என்.பி.) ஃபுசியா விமர்சித்தார்.

“மாநிலத்தின் ஒரு பகுதியான பி.கே.என்.பி.-ஆல், அமலாக்கம் செய்யப்படுகிறது. ஆக, நிச்சயமாக சுயஆர்வம் அதில் உள்ளது,” என்று அவர் கூறினார்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மாசுபாடு சம்பவத்தைக் கருத்தில் கொண்டு, ஃபுசியா இது ஒரு “சுற்றுச்சூழல் பேரழிவு” என்றும் குவாந்தான் மக்களுக்கு இது ஒரு “பயங்கரக் கனவு” என்றும் விவரித்தார்.

அப்படியிருந்தும், குவாந்தான் குடியிருப்பாளர்கள் பலருக்குப் புதிய சுரங்கத் திட்டம் பற்றி தெரியாது என்று அவர் கூறினார்.

ஃபூசியாவின் கூற்றுப்படி, கோவிட் -19 முடக்கத்தின் போது, பொது ஆலோசனை அமர்வுகளின் வழி, இப்பிரச்சினையை மக்களுக்கு விளக்கப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைந்துபோனது.

“எனது கவலை என்னவென்றால், நிறைய ஆர்ப்பாட்டங்கள் இருக்காது, ஏனென்றால் மக்களுக்கு இப்பிரச்சனை பற்றி தெரியாது; எனவே, என்ன செய்வது என்றும் அவர்களுக்குத் தெரியாது.

“அவர்களின் வாக்குறுதிகள் அனைத்திற்கும் அப்பால், மற்றொரு பேரழிவு ஏற்படாது என்பதை நாம் எவ்வாறு உறுதிப்படுத்துவது,” என்று அவர் கேட்டார்.

குவாந்தானில் பாக்சைட் சுரங்கத்திற்கான தடை நீக்கப்பட்டதாகவும், பஹாங் அரசாங்கத்திற்குச் சொந்தமான அமைப்பு புதியச் சுரங்கத் திட்டத்திற்குத் தலைமை தாங்குவதாகவும் மலேசியாகினி முன்பு தெரிவித்தது.

இந்த ஈ.ஐ.ஏ. அறிக்கை, ஜூன் 22 முதல் நாளை (ஜூலை 21) வரை, பொது கண்காட்சிக்குத் திறக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலகட்டத்தில், அத்திட்டத்தின் ஈ.ஐ.ஏ. குறித்து தங்கள் கருத்துக்களை வழங்க பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

சேவ் மலேசியா, ஸ்டாப் லினாஸ்’ சுற்றுச்சூழல் குழுவால் முன்மொழியப்பட்ட சுரங்கத் திட்டம் குறித்து, பொதுமக்களுக்குப் போதுமான தகவல்கள் கிடைக்காததால், கவலை அடைந்துள்ளதாக அக்குழு கூறியது.

அதன் தலைவர், தான் புன் தீட், இந்தத் திட்டத்தை ஆராய்ந்து கருத்துக்களை வழங்க போதுமான நேரம் இல்லை என்றார்.

“குவாந்தானில் வசிக்கும் ஒவ்வொருவரும் அதில் ஒரு பங்குதாரர், புக்கிட் கோ’வில் வசிப்பவர்கள் மட்டுமல்ல,” என்று அவர் கூறினார்.

பொதுமக்களின் கருத்துக்களைச் சேகரிப்பதற்கான காலத்தை நீட்டிக்குமாறு தான் சுற்றுச்சூழல் திணைக்களத்தை (ஜே.எ.எஸ்.) வலியுறுத்தினார்.

திட்டத்தின் ஈ.ஐ.ஏ.-க்காக நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், பதிலளித்தவர்களில் 70 விழுக்காட்டினர் இந்தத் திட்டத்தை ஏற்கவில்லை என்றும், அது பயனளிக்காது என்றும் உணர்ந்தனர்.

அமலாக்க முகவர்கள் சம்பந்தப்பட்ட சுய ஆர்வத்தின் காரணமாக, இதுபோன்றச் சுரங்கத் திட்டங்களில் மாநில அரசு நிறுவனங்கள் ஈடுபடக்கூடாது என்று ஃபுசியாவின் உணர்வுகளுடன் ஒத்து தான் குரல் கொடுத்தார்.

இந்தப் பாக்சைட் சுரங்கத்தின் ஈ.ஐ.ஏ.-ஐ அங்கீகரிப்பதற்கு முன், இரண்டு முறை சிந்திக்க வேண்டும் என்று அவர் ஜே.எ.எஸ்.-ஐ வலியுறுத்தினார்.