கோவிட் -19 நோய்த்தொற்றின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பால், சமீபத்தில் நாட்டில் அதிக எண்ணிக்கையிலான நேர்மறை நிகழ்வுகளால் பொது மருத்துவமனைகள், குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கில் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.
இந்த நிலைமை, முன்னதாகவே அதிகப் பணிசுமையை எதிர்கொண்ட சுகாதார ஊழியர்களுக்குக் கடும் அழுத்தம் அளித்து வருவதால், அவர்களில் சிலர் தங்கள் பணியிலிருந்து விலக முடிவு செய்துள்ளனர்.
அவர்களில் ஒருவரின் கூற்றுப்படி, கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றி, குறைந்தது 15 மருத்துவர்களாவது கடந்த இரண்டு வாரங்களில் தங்கள் சேவையை நிறுத்திவிட்டனர்.
அடையாளம் கூற மறுத்த அந்த மருத்துவர் – மலேசியாகினியிடம் பல பணி விலகல் கடிதங்களையும் காட்டினார்.
ஹர்தால் டாக்டர் கோன்ட்ரேக் (ஒப்பந்த முறையில் பணியில் இருக்கும் மருத்துவர்களின் போராட்டம்) என்றக் குழுவின் குற்றச்சாட்டுகளையும் அவர் உறுதிப்படுத்தினார், இக்குழு ஒப்பந்த மருத்துவ ஊழியர்களுக்கும் சிறந்த உபசரிப்பு அளிக்க வேண்டும் என்று அரசாங்கத்தை வற்புறுத்தி வருகிறது.
மலேசியாகினியுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட இரண்டு கடிதங்கள், ஒப்பந்த மருத்துவரின் பதவி விலகளை 24-மணிநேர அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்பட்டதைக் காட்டியது.
கோவிட் -19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க அவர்கள் மேற்கொண்ட அயராத முயற்சிகளுக்குப் பின்னால், விரக்தி மற்றும் நிச்சயமற்ற எதிர்காலம் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் காரணம் கூறப்பட்டது.
ஹர்தால் டாக்டர் கோன்ட்ரேக் பணி விலகல் கடிதத்தின் படத்தையும் அவர்கள் தங்கள் கீச்சகத்தில் பகிர்ந்துள்ளனர்.
“மற்றொரு 24-மணிநேர பணி விலகல் அறிவிப்பு. ஒவ்வொருவராக அவர்கள் களத்தை விட்டு வெளியேறுகின்றனர். அவர்களின் மேலதிகாரிகள் எங்கே?
“அவர்களுக்குத் தெரியாதா அல்லது தெரிந்துகொள்ள விருப்பம் இல்லையா? இன்னும் காரணங்கள் கூறுகிறீர்களா?” என்று அந்த் கீச்சக செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பொது மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்த மருத்துவர்கள் ஐந்து வருட பயிற்சிக்குப் பிறகு வேலை இழக்கும் வாய்ப்பை எதிர்கொள்கின்றனர்.
அரசாங்க செலவினக் கட்டுப்பாடுகள் காரணமாக அவர்கள் ஆட்சேர்ப்பு அல்லது நிரந்தர பதவிகளில் பணி அமர்த்தப்படுவதில்லை.
எனவே, ஒப்பந்த மருத்துவர்கள் குழு, எதிர்வரும் ஜூலை 26-ம் தேதி, ஒருநாள் ஹர்த்தாலை (பணி நிறுத்தம்) நடத்த திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாகவே அவர்களில் சிலர் பணியிலிருந்து விலகியுள்ளனர்.
ஜூலை 12-ம் தேதி, தேசியக் கூட்டணி அரசாங்கம் பிரச்சினையைச் சமாளிக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறியது, ஆனால் இதுவரை எந்தத் திட்டமும் சமர்ப்பிக்கப்படவில்லை.
நேற்றைய நிலவரப்படி, கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை, 17 நாட்களில் 67,447-லிருந்து 137,587 என, இரு மடங்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.