கோவிட் -19 தடுப்பூசி பெறும்போது, தடுப்பூசி பெறுபவர்கள் தங்களைப் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று மலேசிய மருத்துவச் சங்கம் (எம்.எம்.ஏ.) தெரிவித்துள்ளது.
ஒரு தடுப்பூசி செய்வதற்கு முன்பு, ஒழுங்காக நிரப்பப்பட்ட தடுப்பூசியைக் காண்பிப்பதன் மூலம் செந்தர இயங்குதல் நடைமுறைகளை (எஸ்ஓபி) கடைப்பிடிக்குமாறு மருத்துவச் சங்கம் அனைத்து தடுப்பூசி வழங்குநர்களையும் கேட்டுக் கொண்டது.
சமீபத்தில், வெற்று சிரிஞ்ச் ஊசி பெற்றதாகப் பலர் கூறியதை அடுத்து இந்தப் பரிந்துரை வந்துள்ளது.
இதுபோன்ற இரண்டு சம்பவங்கள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன, ஆனால் மற்ற இரண்டு புகார்களில் தடுப்பூசி போடும் போது வீடியோக்களையோ படங்களையோ எடுக்க அனுமதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர்.
மலேசியாகினியிடம் பேசிய எம்.எம்.ஏ. தலைவர், டாக்டர் எம்.சுப்பிரமணியம், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க தடுப்பூசி எஸ்ஓபி மிகவும் தீவிரமாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
கடந்த மே 24-ம் தேதி, தடுப்பூசி பெறுநர்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்னும் பின்னும் சிரிஞ்ச்களைக் காட்டுமாறு சுகாதார ஊழியர்களுக்குச் சுகாதார அமைச்சு உத்தரவு பிறப்பித்தது.
“சுகாதாரப் பணியாளர்கள், கொடுக்கப்படும் ஊசி மருந்துகளைப் பார்க்க பெறுநர்களை ஊக்குவிக்க வேண்டும்.
“இந்த நடவடிக்கையால், தடுப்பூசிகள் சரியாக வழங்கப்பட்டதா என்ற சந்தேகத்தை நீக்க முடியும்,” என்று அவர் கூறினார்.
வீடியோ பதிவை அனுமதிக்கவும்
கடந்த மே மாதத்திலிருந்து, சில தடுப்பூசி மையங்கள் (பிபிவி) பெறுநர்களுக்குத் தடுப்பூசி ஊசி போடும்போது படங்களை எடுக்க தடை விதித்துள்ளன. இந்த விஷயத்தில் அதிகாரப்பூர்வ விதிகள் எதுவும் அறியப்படவில்லை.
சில தடுப்பூசி பெறுநர்கள், தடுப்பூசியின் போதுமான மருந்தளவுகளைப் பெறவில்லை என்பதைக் காட்டும் வீடியோ காட்சிகள் தோன்றிய பின்னர் இது வந்தது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அனைத்து தடுப்பூசிகளுக்கும், மே 24 அன்று அரசாங்கம் ஓர் ஒழுங்குமுறை வெளியிட்டது.
இந்தப் “படங்கள் இல்லை, வீடியோக்கள் இல்லை” எனும் விதி, சமீபத்தில் ‘வெற்று’ தடுப்பூசிகள் வழக்கைத் தொடர்ந்து கவனத்திற்கு வந்தது.
வீடியோ பதிவுகளை எடுக்க பெறுநர்களை அனுமதிக்க வேண்டும் என்று சுப்பிரமணியம் கருத்து தெரிவித்தார்.
இதுபோன்ற கிளிப்களைப் பார்ப்பது, அதிக நபர்களுக்குத் தடுப்பூசி போட ஊக்குவிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
“எல்லோருடைய தனியுரிமையும் மதிக்கப்படுவதோடு, நடைமுறைக்குத் தடையாக இல்லாத வரை, அது சரியாக இருக்க வேண்டும்.
“பலருக்குத் தடுப்பூசி பெறுவது என்பது அவர்கள் நினைவில் கொள்ள விரும்பும் ஓர் அர்த்தமுள்ள மற்றும் முக்கியமான நிகழ்வாகும்.
“இதை நேர்மறையாகப் பார்க்கும்போது, பல்வேறு சமூக ஊடகத் தளங்களில் இப்போது காணப்படுவது போல், ஊசி போட பதிவுசெய்ய மற்றவர்களையும் இது ஊக்குவிக்கக்கூடும்,” என்று அவர் கூறினார்.
நேற்று, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாஹ்மி ஃபட்ஸிலும் தடுப்பூசி பெறும் போது பொதுமக்கள் புகைப்படம் எடுக்க அனுமதிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.