தடுப்பூசி மையங்களில், ஆடைக் குறியீடுகள் குறித்த விதிகளை விதிக்க வேண்டிய அவசியமில்லை என்று மலேசிய மருத்துவச் சங்கம் (எம்.எம்.ஏ.) தெரிவித்துள்ளது.
அதற்குப் பதிலாக, கோவிட் -19 தொற்றைக் கட்டுப்படுத்த அதிகத் தடுப்பூசிகளைச் செலுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென அதன் தலைவர், டாக்டர் எம். சுப்பிரமணியம் பரிந்துரைத்தார்.
முன்னதாக, இரண்டு பிபிவி-க்களில் ஆடைக் குறியீட்டைக் கடைப்பிடிக்காத இருவரை உபசரிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
மற்றொரு பிபிவி, தனது முகநூலில் ஆடைகள் குறித்த வழிகாட்டுதல்களை அறிவித்தது.
மலேசியாகினியிடம் பேசிய சுப்பிரமணியம், அத்தகைய விதிமுறைகள் தேவையில்லை என்று கூறினார்.
“உடல்நலம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு எந்தவிதமான நடத்தை விதிகளும் இருக்கக்கூடாது. அவர்களுக்குத் தடுப்பூசி நியமனம் இருக்கும் வரை, அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும்.
“இப்போது முக்கிய முன்னுரிமை, முடிந்தவரைப் பலருக்குத் தடுப்பூசி போடுவதுதான். மக்களைப் புறக்கணிப்பதற்கான நேரம் இதுவல்ல,” என்றார் அவர்.
கோவிட் -19 நோய்த்தடுப்பு சிறப்பு பணிக்குழு (சி.ஐ.தி.எஃப்.) மலேசியாகினியிடம் இந்த விஷயத்தைக் “கண்காணிப்பதாக” கூறியிருந்தது, ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று கூறவில்லை.