உதவிப் பொருள் வழங்கிய கேசவனுக்கு வாடகை வாகன ஓட்டுநர் சங்கம் நன்றி

நாட்டையே உலுக்கி வரும் கோவிட்-19 பெருந்தொற்று நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவால், பலர் வருமானம் இன்றி தவிக்கின்றனர்.

அந்த வகையில், வருமானம் இழந்துள்ள வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு உதவியாக, உணவு பொருட்கள் அனுப்பிய சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் அவர்களுக்குச் சுங்கை சிப்புட் வாடகை வாகன ஓட்டுநர் சங்கம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டது

முன்னதாக, கடந்த ஆண்டு முதல், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் வருமானம் இழந்துள்ள ஓட்டுநர்களுக்குக் கேசவன் உதவித்தொகை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இம்முறையும் தாமே முன்வந்து ஓட்டுநர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கியது பாராட்டுக்குரியது என ஓட்டுநர்கள் சார்பில் சங்கம் நன்றியினை தெரிவித்துக் கொண்டது.

இதே போன்று, அந்தந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் அவரவர் வட்டாரத்தில் இருக்கும் வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு உதவ முன்வர வேண்டுமெனவும் சங்கம் கேட்டுக்கொண்டது.