பி.எச்.இ.பி. நிர்வாக இயக்குநர் பாராங்கால் தாக்கப்பட்டார்

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் (பி.எச்.இ.பி.) நிர்வாக இயக்குநர், நேற்று இரவு தனது இல்லத்திற்கு வெளியே நடந்த தாக்குதலில் காயமடைந்தார்.

எம் இராமச்சந்திரன், தனது காரில் இருந்து இறங்கும்போது சுமார் மூன்று முதல் நான்கு அடையாளம் தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியதாக பி.எச்.இ.பி. தலைவர் பி இராமசாமி தெரிவித்துள்ளார்.

இராமசந்திரன் உடல் முழுவதும் காயங்களுக்கு ஆளானதாகவும் இராமசாமி கூறினார்.

தற்போது, செப்பராங் ஜெயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர், நல்ல  நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான ஆயுதத்தைப் பயன்படுத்தி, வேண்டுமென்றேக் கடுமையாக உடல் ரீதியான தீங்கு விளைவித்ததற்காக, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 326-ன் கீழ், வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகச் செப்பராங் பெராய் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஷாஃபி அப்துத் சமாட் கூறியதாக எஃப்எம்டி மேற்கோளிட்டுள்ளது.

பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வரான இராமசாமி, இந்தத் தாக்குதலை மாநில அரசு மீதான தாக்குதல் என்று கண்டித்தார்.

“இராமச்சந்திரன் மீதான தாக்குதல், பினாங்கு அரசாங்கம், பி.எச்.இ.பி. மற்றும் பி.எச்.இ.பி.-இன் தலைவரான என் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.

“பினாங்கு அரசாங்கத்தின் பிரதிநிதி என்ற வகையில், இத்தாக்குதலுக்குப் பின்னால் இருக்கும் கோழைகளைப் பிடிக்கும் முயற்சியில் நான் முழுமையாக ஈடுபடுவேன் என்று பினாங்கு இந்திய சமூகத்திற்கு நான் உறுதியளிக்கிறேன்,” என்று அவர் இன்று ஒரு முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.