சிதம்பரநாதன் காலமானார் – தமிழ்க்கல்வி ஒரு காவலனை இழந்தது!

சிலாங்கூர் மாநில தமிழ்மொழி பிரிவின் உதவி இயக்குநர் சிதம்பரநாதன் அப்பாதுரை (வயது 59),  கோவிட் தொற்றுனால் நேற்று மாலை காலமானர். கடந்த பத்து நாட்களாக இந்த தொற்றுனால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த மூன்று நாட்களாக கிள்ளான் பொது மருத்துமனைனையில் சிகிழ்ச்சி பெற்று வந்தார்.

தமிழ்ப்பள்ளி ஆசிரியராக பணியாற்றிய சிதம்பரநாதன், ஒரு சிறந்த தமிழ்ப்பற்றாளராவார். இவர் தமிழ்ப்பள்ளி, தமிழ்மொழி மற்றும் தமிழ்ச் சமூக மேம்பாட்டுக்காகப் பல இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.

இவரின் சமூக பங்களிப்பை விவரித்த கிள்ளான் இந்து இளைஞர் அமைப்பின் ஆலோசகர் குணசேகரன், சமூக உணர்வு மிக்கவர் என்கிறார். குறிப்பாக கோலக்கிள்ளான் திருவள்ளுவர் மன்றத்தில் துணைத்தலைவராகவும், செயலராகவும், செயலவை உறுப்பினராகவும் பொறுப்புக்களை ஏற்று அதன் வளர்ச்சிக்கும் நிலைத்தன்மைக்கும் பெரும் பங்காற்றியுள்ளார். அதோடு, “இந்து இளைஞர் அமைப்பிலும் தமிழ்மொழி சார்பான வழிகாட்டி நூல்களையும், வாசிப்புக்கான இதழ்களையும் மிகவும் ஆர்வத்துடன் வெளியிட்டவர்” என்கிறார் குணா.

2007-இல் நடைபெற்ற ஹிண்ட்ராப் பேரணிக்கு முன்பும் அதற்கு பின்பும்,  கோல்கிள்ளான் வட்டாரத்தில் இந்து இளைஞர் இயக்கம் போன்ற  இயக்கங்களுடன் ஒருங்கிணைத்து இந்திய சமூகத்தின் போராட்ட உணர்வுக்கு  வித்திட்டவர்களில் சிதம்பரநாதனும் ஒருவராவார்.

நல்ல தமிழ்ப்பற்றாளரான இவரொரு சிறந்த வாசகரும் கூட என்கிறார் சிலாங்கூர்  தமிழ்ப்பள்ளிகளின் மேற்பார்வையாளர் மணிசேகர். மேலும்  “தமிழ்மொழி வளர்ச்சிக்கு தமிழ்நாட்டில் இருக்கும் சக மொழிபற்றாலர்களுடன்  நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்” என்கிறார்.

அன்னாரின் பிரிவால் துயரும் அவரின் குடும்பத்தினர்களுக்கு மலேசியஇன்று குடும்பத்தினர்  ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.

அன்னாரின் இறுதிச் சடங்குகள் இன்று (25.7.2021) மாலை 4.00 மணியளவில் மேரு இடுகாட்டில் நடைபெறும் என்று இந்து இளைஞர் குணசேகரன் தெரிவித்தார்.