கோவிட் -19 தொற்றைக் கையாள்வதில் அமைச்சர் ‘அலட்சியம்’ – எம்.பி., ஆர்வலர்கள் போலீசில் புகார்

மலேசியாவில் மோசமடைந்து வரும் கோவிட் -19 தொற்றுநோயைக் கையாள்வதில் சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபாவும் தொடர்புடைய அமைச்சர்களும்  “அலட்சியம்” காட்டுகின்றனர் என்று கூறி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்கள் அடங்கிய குழு ஒன்று போலிஸ் புகார் பதிவு செய்தது.

“துரதிர்ஷ்டவசமாக கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதிலும், அதிகமான மக்கள் இந்தத் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதைத் தடுப்பதிலும் அரசாங்கம் தனது கடமைகளையும் நடவடிக்கைகளையும் நிறைவேற்றத் தவறிவிட்டது.

“சுகாதார அமைச்சின் தரவுகளையும், தற்போதுள்ள சட்டத்தையும் ஆராய்ந்த பின்னர், கோவிட் -19 தண்டனைச் சட்டம் பிரிவு 269 மற்றும் பிரிவு 304A ஆகியவற்றின் கீழ் கோவிட் -19 பரவுவதைத் தடுக்கும் பொறுப்பில் உள்ள சுகாதார அமைச்சரையும் தொடர்புடைய மற்ற நிறுவனங்களையும் விசாரிக்குமாறு காவல்துறையிடம் நான் கோர விரும்புகிறேன்.

“அமைச்சர் கடமைகளை நிறைவேற்றுவதில் குற்றவியல் அலட்சியம் இருப்பதை நான் கண்டறிந்தேன், இதன் விளைவாக சமூகத்தில் கோவிட் -19 பரவியது, இது உயிருக்கு ஆபத்தையும் மரணத்தையும் விளைவித்தது,” என்று இன்று காலை, கோலாலம்பூர், பந்தாய் காவல் நிலையத்தில் செய்த போலிஸ் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலிஸ் புகாரைத் தாக்கல் செய்த ஏழு எம்.பி.க்கள் அஜீஸ் ஜம்மான் (செபாங்கர்), ஃபாஹ்மி ஃபட்ஸில் (லெம்பா பந்தாய்), கெல்வின் யீ (பண்டார் கூச்சிங்), சார்லஸ் சந்தியாகோ (கிள்ளான்), ஹன்னா இயோ (செகாம்பூட்), மரியா சின் அப்துல்லா (பெட்டாலிங் ஜெயா), இஸ்னரைய்சா முனிரா மஜிலிஸ் (கோத்தா பெலுட்) ஆகியோருடன் ஆர்வலர்கள் அம்பிகா ஸ்ரீநீவாசன் மற்றும் மரினா மகாதிர் போன்றோரும் பங்கேற்றனர்.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 269, “ஓர் உயிருக்கு ஆபத்தான நோயைப் பரப்பக்கூடிய கவனக்குறைவான செயல்களை” கையாள்வது ஆகும், அதே சமயம் பிரிவு 304A “அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துவது” ஆகும்.