நாடு தளுவிய அளவில் ஒப்பந்த மருத்துவர்கள் வேலை நிறுத்தம்!

சுமார் 15-20 மருத்துவமனைகளில் உள்ள அரசாங்க ஒப்பந்த மருத்துவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் மருத்துவப் பயிற்சி வாய்ப்புகளை கோரி நாடு தழுவிய வேலைநிறுத்ததையும் வெளிநடப்புக்களையும் மேற்கொண்டனர்.

ஹர்த்தால் டோக்டர் கோன்ட்ராக் (எச்.டி.கே) போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக மேலதிகாரிகள் மிரட்டிய போதிலும் குறைந்தது ஆயிரம் மருத்துவர்களுக்கு மேலாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

பெரும்பாலும் கறுப்பு நிற உடை அணிந்து பாதகை பலகைகள் மற்றும் சுவரொட்டிகளை ஏந்திய பங்கேற்பாளர்கள் காலை 11 மணிக்கு அந்தந்த மருத்துவமனையில் இருந்து ஒன்றாக வெளியேறத் தொடங்கினர்.

கணிசமான எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களைக் கண்ட இடங்களில் கோலாலம்பூர் மருத்துவமனை, சுங்கை புலோ மருத்துவமனை, ஷா ஆலம் மருத்துவமனை, புலாவ் பினாங் மருத்துவமனை, செர்டாங் மருத்துவமனை, செலயாங் மருத்துவமனை, அம்பாங் மருத்துவமனை, புத்ராஜயா மருத்துவமனை, கோட்டா கினாபாலுவில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனை ஆகியவை அடங்கும். மருத்துவமனை ராஜா பெரெம்புவான் ஜைனாப், கோட்டா பாரு, ராஜா பெர்மாய்சுரி பைனுன் மருத்துவமனை, ஈப்போ மற்றும் கிளாங்கில் உள்ள தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைகளும் அடங்கும்.

சுங்கை புலோ மருத்துவமனையில் கிட்டத்தட்ட 100 பேரும், கோலாலம்பூர் மருத்துவமனையில் 50 பேரும், மருத்துவமனை ஷாலாமில் 30 பேரும் பங்கேற்றதாக மலேசியாகினி மதிப்பிடுகிறது.

இதற்கிடையில், புத்ராஜெயா மருத்துவமனையில், முக்கிய மருத்துவர் டாக்டர் ரபீதா அப்துல்லா மற்றும் நெப்ராலஜி துறையின் கிட்டத்தட்ட 40 மருத்துவர்கள் இந்தப்  போராட்டத்தில் இணைந்தனர்.

கெடா, பெர்லிஸ், ஜொகூர் மற்றும் தெரெங்கானு போன்ற பிற மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளும் இதேபோன்ற போராட்டங்களைக் கண்டதாக அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் பல இடங்களில் உறுதிப்படுத்தாத போராட்டங்கள்  நடப்தாகவும் தகவல்களுக்கு காத்திருப்பதாக கூறினர்.

கைது அச்சுறுத்தல் காரணமாக MAEPS -இல் வெளிநடப்பு  ரத்து செய்யப்பட்டது

செர்டாங்கின் மேப்ஸில் உள்ள கோவிட் -19 தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில், போலிஸ் கைது அச்சுறுத்தலாள் டாக்டர்கள் முன்மொழியப்பட்ட வெளிநடப்பை ரத்து செய்ய முடிவு செய்தனர்.

அனைத்து ஊடகங்களும் இந்த நிகழ்வை பதிவு செய்ய  தடைசெய்யப்பட்டுள்ளதாக ஊடக உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

அரசு ஜூனியர் ஒப்பந்த மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் ஐந்தாண்டு பயிற்சி முடிந்ததும் வேலை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர்.

இந்த ஒப்பந்த மருத்துவர்கள் நிரந்தர பதவிகளில் உள்ள சக ஊழியர்களுடன் ஒப்பிடும்போது சில சலுகைகளைப் பெறுவதில்லை. மேலும், அவர்களின் தொழில் வாழ்க்கையை நிபுணத்துவமாக முன்னேற்றுவதற்கான சம வாய்ப்பும் கிடைப்பதில்லை.

ஹர்த்தாலைத் தடுப்பதற்கான கடைசி நிமிட முயற்சியாக, மாநில மற்றும் மருத்துவமனை நிர்வாக மட்டங்களில் உள்ள சுகாதார அமைச்சக அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதற்கு எதிராக நேற்று இளைய மருத்துவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா நேற்று இரவு செய்தியில், மருத்துவர்களின் கடமைகள் பற்றிய பிரமாணத்தை மீறக்கூடாது என்று   நினைவுபடுத்தினர்.

கோலாலம்பூர் மருத்துவமனையில் பேசிய எச்.டி.கே செய்தித் தொடர்பாளர் டாக்டர் முஹம்மது, “இன்று நாங்கள் ஒரு ஆர்ப்பாட்டம் அல்லது எதிர்ப்பை நடத்த வில்லை, ஆனால் நாங்கள் … ஒப்பந்த மருத்துவர்களுக்கு சம உரிமைகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் கேட்கிறோம்”, என்றார்.

“கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் எங்களில் பலர் ஈடுபட்டுள்ளோம், இப்போது எங்களில் கிட்டத்தட்ட 150 ஊழியர்கள் ராஜினாமா செய்துவிட்டார்கள். நாங்கள் தற்போதுள்ள அமைப்பு முறையால் சோர்வடைய ஆரம்பித்துள்ளோம்.”

தங்களுக்கு உதவவும்,தங்களின் குரல்களைக் கேட்கவும் மருத்துவர்கள் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

“சில சலுகைகள் இருந்தபோதிலும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. சுகாதார அமைச்சு மற்றும் பிரதமரிடமிருந்து எந்த விவரங்களும் இல்லை, எனவே அரசாங்கத்தின் பதிலுக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

டாக்டர்களை விட அதிகமான போலீசார் என்கிறது சுகாகம்.

ஆர்ப்பாட்டங்களை கண்காணிக்க கோலாலம்பூர் மருத்துவமனையில் தான் இருப்பதாகவும், இதுவரை புகாரளிக்க எதிர்மறையாக எதுவும் இல்லை என்றும் சுஹகம் கமிஷனர் மா வெங் குவாய் கூறினார்.

“மருத்துவர்களை விட அதிகமான போலீசார் இருப்பதாக தெரிகிறது. ஆனால் செய்தி தெளிவாக உள்ளது, எங்கள் நிலைப்பாடு நாம் இரு தரப்பையும் பார்க்க வேண்டும். நாங்கள் ஒரு பொது விசாரணை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் விரும்புகிறார்கள், ஆனால் அதே நேரத்தில், நோயாளிகள் நலனை மருத்துவர்கள் கவனிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.”

“அரசாங்க சுகாதாரம் என்பது ஒரு அடிப்படை மனித உரிமை, நாங்கள் பொதுமக்களின் நலன்கள், நோயாளிகளின் ஆரோக்கியம் மற்றும் மருத்துவர்களின் நலன்களுக்கு – இவைகளுக்கிடையே நிலைபாடு வேண்டும். இதை அரசாங்கம் விரைவில் தீர்க்க முடியும் என்று நான் நம்புகிறேன்” என்று மா வெங் குவாய் கூறினார்.